முல்லை மாவட்ட விவசாயிகள் 128 பேருக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து விதைநெல் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சிக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை (09.09.2015) இடம்பெற்ற நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு விதைநெல்லை விவசாயிகளுக்கு வழங்கிவைத்துள்ளார்.
உவர்எதிர்ப்பு நெல்லினமான ஏ.ரீ 362 மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்ற பாரம்பரிய நெல்லினமான சுகந்தல் ஆகிய இரண்டு இனங்களினதும் விதைநெல்லே இவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 50 விவசாயிகளுக்கு விதைஎள்ளும், 12 விவசாயிகளுக்கு இழையவளர்ப்பின் மூலம் உருவாக்கப்பட்ட வாழைக்குட்டிகளும், 4 விவசாயிகளுக்குக் காளான் செய்கையை மேற்கொள்வதற்கான உபகரணத்தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. பெரும்போக நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கோடும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடும் வழங்கிவைக்கப்பட்டிருக்கும் விதைகள், ஏனைய நடுகைப்பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கான மொத்தமதிப்பு 1.7 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் ஜெ.ஜெயதேவி, பொ.அற்புதச்சந்திரன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் உ.சுபசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.