நிலக்கடலைச் செய்கைக்குப் பிரசித்தமான முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் ‘முல்லை முத்து’ என்ற பெயரில் புதிய ‘ஜம்போ’ ரக நிலக்கடலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை (24.10.2014) நடைபெற்றது. விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதமவிருந்தினராகத் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியிலேயே ‘முல்லை முத்து’ பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலக்கடலை உற்பத்தியில் முதலாவது இடத்தில் மொனராகலையும் இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு மாவட்டமும் உள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆண்டுதோறும் 10,000 ஏக்கர் அளவில் நிலக்கடலைச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. நிலக்கடலைச் செய்கையை மேலும் ஊக்குவித்து முதலாவது இடத்தை எட்டும் நோக்கில் நிலக்கடலைச் செய்கையாளர்களுக்கு விவசாயத் திணைக்களத்தினால் பல்வேறு ஊக்குவிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதன் ஒரு கட்டமாகவே ஜப்பானிய நிறுவனமான ஜெய்க்காவின் அனுசரணையுடன் புதிய ஜம்போரக நிலக்கடலை அறிமுகப்படுத்தப்பட்டுப் பரீட்சார்த்த விளைவிப்பின் பின்னர் இப்போது விவசாயிகளுக்கான விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முல்லைத்தீவில் பயிரிடப்பட்டுவரும் திஸ்ஸ, வளவை இனங்களை விடவும் பெரிய அளவிலான இந்த நிலக்கடலை ரகத்துக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் வேண்டுகோளுக்கு இணங்க ‘முல்லை முத்து’ என்று பெயரிடப்பட்டிருப்பதாகப் பிரதி விவசாயப் பணிப்பாளர் தெ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியின்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணையாளர் சங்கத்திடம் நிலக்கடலைக் கோது நீக்கும் இயந்திரம் ஒன்றை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கையளித்துள்ளார். இந்த இயந்திரத்தின் மூலம் மிகக்குறைந்த நேரத்தில் மிகக்குறைந்த செலவில் நிலக்கடலைகளில் இருந்து கோதுகளை நீக்கி முத்துகளை வேறாகப் பிரித்தெடுக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன், மாகாணசபை உறுப்பினர்கள் து. ரவிகரன், மேரிகமலா குணசீலன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி. சிவகுமார், உதவி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீரங்கன் ஆகியோரும் அதிக எண்ணிக்கையான நிலக்கடலை உற்பத்தியாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.