முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் விதமாக வடமாகாண விவசாய அமைச்சால் ரூபா 5 மில்லியன் பெறுமதியான நவீன நெல்அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான குறைதீர் நடமாடும் சேவை முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01.12.2015) நடைபெற்றது.
இதன்போது, நெல்அறுவடை இயந்திரத்தை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஒட்டுசுட்டான் ஒருங்கிணைந்த பண்ணையாளர் சங்கத்திடம் கையளித்துள்ளார்.
மனிதவலுவைப் பயன்படுத்தி நெல் அறுவடை செய்வதற்கு முல்லை மாவட்டத்தில் வேலையாட்களுக்குப் பற்றாக்குறைவு உள்ளது. அத்தோடு அதிக காலம் எடுப்பதாகவும் அதிக செலவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்து வந்துள்ளனர். பயன்பாட்டில் இருக்கின்ற ஒரு சில அறுவடை இயந்திரங்களையும், தேவை அதிகமாக இருப்பதால் உரிய நேரத்தில் பெறமுடியாமல் இருப்பதாகவும் இயந்திர உரிமையாளர்கள் அதிக வாடகை கேட்பதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர். இதனை, வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து, நவீன அறுவடை இயந்திரம் விவசாய அமைச்சின் அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு ஒருங்கிணைந்த பண்ணையாளர் கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நெல் அறுவடை இயந்திரத்தைக் கையளிக்கும் நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன், முல்லை மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் க.சிவநேசன், து.ரவிகரன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.