முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன் காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காணாமல் போனோரின் உறவுகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனின் தலைமையில் முல்லை நீதிமன்றத்திற்கு முன்னர் நடாத்த இருப்பதாகவும் அது நிறுத்தப்படவேண்டும் எனவும் முன்னர் பொலிசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று வடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ளவிருந்த காணாமல் போனோரின் உறவுகளுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் மூலம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதாக ரவிகரனுக்கும் அனந்தி சசிதரன் அவர்களுக்கும் மக்கள் தகவல்களை வழங்கியிருந்தனர்.
இராணுவ புலனாய்வாளர்களின் முயற்சிகளை தடுக்கும் வகையில் ரவிகரனால் முல்லைத்தீவு பிரதேசத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டும் அவர்களையும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அவர் முயற்சிகளை முன்னெடுத்தார்.
இந்நிலையில் இன்று காலை இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பம் முதலே ஆங்காங்கே இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு நிகழ்வுகளை அவதானிக்க விடப்பட்டிருந்தனர். அவர்களின் அழுத்தங்களை மீறி மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு காணாமல் போன உறவுகளுக்காய் குரல் கொடுத்து தமது கவலையினையும் கோபத்தினையும் வெளிப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் விதத்தில் இரண்டு பேரூந்து வண்டிகளில் மக்கள் வருவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நடவடிக்கைகள் அவர்களால் ஏற்படுத்தப்பட அங்கு அவர்களுக்கும் காணாமல் போனவர்களின் உறவுகளுக்கும் இடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. பின்னர் பொலிசாரின் கட்டுப்பாட்டில் குழப்ப வந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட மீண்டும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், ரவிகரன், சிவாஜிலிங்கம், அன்ரனி ஜெகநாதன், மேரி கமலா, குணசீலன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் மணிவண்ணன் ஆகியோருடன் வலி வடக்கு பிரதேச சபை உப தலைவர் சஜீவன் உட்பட பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.