Ad Widget

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 68 மில்லியன் நிதி முதற்கட்டமான கிடைக்கப்பெற்றுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் வீடமைப்பு மற்றும் உட்கட்டுமான வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த ஒதுக்கப்பட்ட 318 மில்லியன் ரூபா நிதியில், 68 மில்லியன் ரூபா நிதி முதற்கட்டமான கிடைக்கப்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற மீள்குடியமர்வைத் தொடர்ந்து, இவ்வாண்டில் 156 அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் 65 வீதமான திட்டங்கள் விவசாயத்தை அடிப்படையாகக்கொண்டும் 18 வீதமானவை கடற்தொழிலை மையமாக வைத்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.

கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 55 செயற்திட்டங்களும் மாந்தைகிழக்கில் 21 செயற்திட்டங்களும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 29 செயற்திட்டங்களும் துணுக்காய் பிரதேசத்தில் 16 செயற்திட்டங்களும் முல்லைத்தீவு நகரத்தை மையமாகக்கொண்டு 35 செயற்திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

அபிவிருத்தி செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் குறித்த நான்கு கட்டங்களாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது. மொத்த ஒதுக்கீடான 318 மில்லியன் ரூபா நிதியில் 162 மில்லியன் ரூபா நிதியை மீள்குடியேற்ற அமைச்சு ஒதுக்கியிருக்கின்றது” எனத் தெரிவித்தார்.

Related Posts