Ad Widget

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு யஸ்மின் சூக்கா கடும் கண்டனம்!

முல்லைத்தீவில் இன்று மாலை நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை வன்மையாக கண்டிப்பதோடு, குறித்த தீர்ப்பிற்கு எதிராக இலங்கையின் சகல மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அணிதிரள வேண்டுமென உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களது நினைவாக சிலைகளை அமைத்து, கல்வெட்டுக்களை பதித்து இன்று மாலை சிவில் அமைப்புகள் இணைந்து நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிலையில் குறித்த சிலைகளை செய்த அருட்தந்தை எழில்ராஜை காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதோடு, நேற்றிரவு முல்லைத்தீவு நீதிமன்றத்தின் ஊடாக 14 நாட்களுக்கு தடையுத்தரவும் பிறக்கப்பட்டது.

இதற்கு கடும் கண்டம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே யஸ்மின் சூக்கா மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் அமைதியான சூழல், தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் ஒருமைப்பாடு ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந் நிகழ்விற்கு தடை விதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இறந்த தமது உறவுகளை நினைவுகூருவது அடிப்படை உரிமையாக இருக்கின்றபோது, அது எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமென சூக்கா கேள்வியெழுப்பியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த குழந்தைகள் உள்ளிட்டவர்களின் பெயர்களை கருங்கற்களில் செதுக்கி, அவற்றை முல்லைத்தீவு பேதுறு தேவாலயத்தின் அருகில் நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கல்வெட்டுக்களில் பெயர் பொறித்தவரை அழைத்து, குறித்த கற்களில் பொறிக்கப்பட்ட பெயர் விபரத்தை தருமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். தற்போது, சீருடை தரித்த காவல்துறையினர் மூவருடன், குறித்த ஆலயத்தின் அருகில் காவல்துறை வாகனமொன்றும் தரித்து வைக்கப்பட்டுள்ளது.

இச் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ள சூக்கா, மனிதர்கள் துக்கம் அனுஷ்டிப்பது நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டின் முக்கிய அங்கமாகும் என்றும், இவ்விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://www.e-jaffna.com/archives/82539

Related Posts