முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்த முடிவு செய்து இருக்கின்றோம் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (04.10.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய ரி.சரவணராஜா தன்னுடைய கடமை நிமித்தம் ஆற்றிய சேவைக்காக அல்லது ஆற்றிய பணிக்காக அதிகார வர்க்கத்தினாலே அச்சுறுத்தப்பட்டு இன்று நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலைமைக்கு அவர் உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த சம்பவம் மிக வேதனையானது மாத்திரமல்ல, இலங்கையில் இருக்கக்கூடிய அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டிய ஒரு துயரமான, நிதித்துறை வரலாற்றிலேயே காறை படிந்த கறுப்பு சம்பவமாக நாங்கள் இதனை பார்க்கின்றோம்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிடுகின்ற விதமாக நேற்றைய தினம் (03) வடக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மாகாணங்கள் இருக்கக்கூடிய அனைத்து சட்டத்தரணிகளும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தோம்.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து சட்டத்தரணிகளும் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு முன்பாக நாங்கள் கூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை அங்கு நடத்தி இருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும் (நேற்று) சட்டத்தரணிகள் வடக்கு கிழக்கு எங்கும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கின்றார்கள்
இன்றைய தினம் தமிழ் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்ற இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கும் வலு சேர்க்கும் விதமாக சட்டத்தரணிகள் இன்றைய தினமும் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.
நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தில் கூடிய சட்டத்தரணிகள் ஒரு தீர்மானம் ஒன்று எடுத்து இருக்கின்றோம் அதில் பிரதானமாக இரண்டு விடயங்களை நான் சுட்டிக்காட்டலாம் ஒன்று வடக்கு கிழக்கு எங்கும் எங்களுக்கென்று ஒரு சட்டத்தரணி சங்கத்தை உருவாக்குவது தொடர்பில் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.
இரண்டாவது எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக இந்த சம்பவத்துக்கு எதிராக கண்டனத்தை வெளியிடும் விதமாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்த முடிவு செய்து இருக்கின்றோம்.
அதிலே இலங்கையினுடைய தாய் சட்டத்தரணிகள் சங்கத்தையும், அனைத்து பிராந்திய சட்டத்தரணிகள் சங்கத்தையும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு தொடர்பில் நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்த போராட்டம் ஒரு இலங்கை முழுவதும் மட்டுமல்ல உலகத்தினுடைய கவனத்தையும் ஈர்ப்பதற்காக கொழும்பிலே வடக்கு மாகாண சட்டத்தரணிகளால் முன்னெடுக்கின்ற போராட்டமாக அமையும் என்பதை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.