முல்லைத்தீவில் வயற்காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை!

முல்லைத்தீவு – நித்தகைக்குளத்தையும் அதனோடு இணைந்த வயற்காணிகளையும் விடுவித்துத் தருவதுடன், வயற்காணிகளுக்கு செல்வதற்கான வீதியினையும் மறுசீரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருகையில்,

நித்தகைக்குள விடுவிப்பு மற்றும் வீதி மறுசீரமைப்பு போன்றவை தொடர்பான கோரிக்கையொன்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் குமுழமுனை கிழக்கினுடைய கமக்கார அமைப்பினரின் அழைப்பை ஏற்ற வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன், அப்பகுதிக்கு நேரடியாகச்சென்று நிலவரங்களை பார்வையிட்டார்.

இது தொடர்பில் அவர் கருத்துக் கூறுகையில், “முல்லைத்தீவு குமுழமுனைக்கு அப்பால் அமைந்துள்ள நித்தகைக்குளம் முன்னர் 935 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்நிலங்களுக்கு தேவையான நீரை வழங்கி வந்தது. இந்தக் குளம் தற்போது மிக மோசமாகப் பாதிப்படைந்து காணப்படுகின்றது.

அதேபோன்று இந்த குளத்தின் நீரினைப்பெற்று ஆண்டின் இரு போகங்களிலும் பாரிய விளைச்சலுடன் காணப்பட்ட வயல் நிலங்கள் இப்போது பற்றைகளாக காட்சி தருகின்றன. மேலும் இந்தப் பகுதி விடுவிப்புச் செய்யப்படாமல் காணப்படுவதால் குளமும் வயல்நிலங்களுக்கு செல்கின்ற பாதைகளும் மோசமாக பாதிப்படைந்து காணப்படுகின்றது.

இந்தப் பகுதியில் குளம் மற்றும் அதனோடிணைந்த வயல் நிலங்கள் இன்றுவரை விடுவிக்கப்படாமல் காணப்படுவதால், அதனை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் மக்களின் பொருளாதாரம் நலிவுற்று காணப்படுகின்றது.

மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு ஒன்பது ஆண்டுகளாகியும், இன்றுவரை இந்தப்பகுதி வயல் நிலங்கள் மற்றும் குளங்கள் விடுவிக்கப்படாமலிருப்பது கவலைக்குரியது. இப்பகுதியை விடுவிப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

இப்பகுதியை விடுவிப்பதுடன் மறுசீரமைப்பும் செய்து மக்களிடம் கையளிப்பதோடு மாவட்டத்தின் பொருண்மிய வலுவையும் உயர்த்த முடியும்” எனத் தெரிவித்தார்.

Related Posts