முல்லைத்தீவில் மீன் வாடிகள் எரிப்பு: படையினர் குவிப்பு

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் உள்ளூர் மீனவர்களுக்குச் சொந்தமான 8 வாடிகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் யாவும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பெருமளவு பொலிஸாரும் இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளதால் பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தென்னிலங்கை மீனவர்கள் சிலர் முல்லைத்தீவில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அங்குள்ள மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். அவ்வாறு நேற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதனை அங்குள்ள மீனவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து நேற்றிரவு (திங்கட்கிழமை) 10 மணியளவில் உள்ளூர் மீனவர்களுக்கு சொந்தமான 8 வாடிகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. கடும் பிரயத்தனத்திற்கு பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், 3 படகு இயந்திரங்கள், 2 இயந்திரங்கள், 27 வலைகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதென உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆபத்தான சுருக்குவலையினை மின் ஒளி பாய்ச்சி மீன்பிடிக்கு பயன்படுத்துவதனை தடைசெய்ய வேண்டுமென உள்ளூர் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் அங்கு கடற்றொழில் அமைச்சர் நேரில் சென்று ஆராயந்ததோடு, குறித்த மீன்பிடி முறையை தடை செய்யுமாறும் உத்தரவிட்டார். அதனையும் தாண்டி தென்னிலங்கை மீனவர்கள் நேற்று குறித்த முறையை பயன்படுத்தி மீன்பிடிக்க முடியற்சித்ததாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனை தடுத்ததால், பழிவாங்கும் முயற்சியாக தமது வாடிகள் எரிக்கப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related Posts