முல்லைத்தீவில் மாணவர்கள் மயங்கி வீழ்வது எதற்காக? நடப்பது என்ன?

யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தி துரிதமடைகிறது. வடக்கு கிழக்கில் மீள்கட்டுமானங்கள் சிறப்பாக நடக்கிறதென அரசு சொல்லித்திரிந்தாலும், யதார்த்தமென்னவோ வேறாகத்தான் இருக்கிறது.

யுத்தத்தால் சிதைவடைந்த பகுதி மக்களின் வாழ்க்கையும் சிதைவடைந்துதான் கிடக்கிறது. அரசின் எந்த புனரமைப்பு திட்டமும் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு உதவவில்லையென்பதே யதார்த்தம்.

யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலொன்றான முல்லைத்தீவில் நடக்கும் இந்த அதிர்ச்சி சம்பவங்கள் அபிவிருத்தி கோசங்களின் உண்மை முகத்தை தோலுரிக்கின்றன.

எல்லாவளமும் நிறைந்ததுதான் முல்லைத்தீவு மாவட்டம். யுத்த காலத்தில் கூட கடற்படையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மீன்பிடியில் ஈடுபட்டு வாழ்வை வளமாக நடத்தியவர்கள். உரத் தடை, கிருமிநாசினி தடை என வன்னிக்கான பொருளாதார தடையிலும் சுயசார்பு உற்பத்தியில் நிறைவு கண்டவர்கள். ஆனால் யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்தும் ஒரு வயிறு சோற்றை பெற முடியாமலுள்ளவர்களின் கதைகள் யதார்த்தத்தை தோலுரிக்கின்றன.

முல்லைத்தீவின் கொக்கிளாய், தண்ணீருற்று, செம்மலை, அளம்பில், வலைஞர்மடம், தேவிபுரம், நெத்தலியாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் தினமும் காலைப் பிரார்த்தனையின் போது 4, 5 மாணவ, மாணவிகள் மயக்கமடைந்து விழுகிறார்கள். அவர்களிற்கு சிகிச்சையளித்து எழும்பி உட்கார வைக்கிறார்கள். மயக்கம் பெரும் சமூகப்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

‘ரீச்சர் இன்றைக்கு நான் சாப்பிடல. வீட்டை சமைக்க ஒன்றும் இல்லை. அதனால் அப்படியே வந்து விட்டன் ‘ என கூறும் மாணவர்கள் அங்கு சர்வசாதாரணம் என கனத்த மனதுடன் கூறுகிறார்கள் ஆசிரியர்கள். காலையில் மட்டுமல்ல சில மாணவர்கள் முதல் நாள் இரவு கூட சாப்பிடாமல் இருந்து விட்டு பாடசாலை செல்கிறார்கள்.

ஆசிரியர்கள் பாடசாலை கன்ரினில் தம்மால் முடிந்ததை அந்த மாணவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டு வகுப்புறைக்குச் அழைத்துச் செல்லும் சம்பவங்கள் கூட நடந்து வருகின்றது. முல்லைத்தீவின் சில பகுதிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. நாளாந்த குடும்ப சீவியத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் இங்கு பல குடும்பங்கள் வாழ்கின்ற போது அரசாங்கமும் மாகாணசபையும் கூறும் அபிவிருத்தி எங்கு செல்கிறது? அரசாங்கத்தின் வாழ்வாதார உதவிகள் யாருக்கு வழங்கப்படுகிறது? இப்படி பல கேள்விகள் எழவே செய்கின்றது. வீதிகள் போடுவதும், கட்டடங்கள் கட்டுவதும் தான் அபிவிருத்தி என்றால் மக்கள் அற்ற ஒரு மயானத்தையே நாம் காணவேண்டி வரும்.

இப்பகுதியில் வாழும் குடும்பங்கள் பல இன்று ஒரு நாள் சீவியத்திற்கு கூட கடற்தொழிலை செய்ய முடியாத நிலையில் உள்ளது. காரணம் இந்திய மீனவர்களின் ஊடுருவல், தென்பகுதி மீனவர்களின் வருகை என நவீன இயந்திர படகுகளின் துணையுடன் முல்லைத்தீவுக்குள் பிரவேசித்து அங்குள்ள மீன்வளத்தை சூறையாடிவிட்டுச் செல்கின்றனர். இதனால் இப்பகுதி மீனவர்களிற்கு மீன் என்பது ஒரு கனவாகிவிட்டது.

சிலபகுதிகளில் சீவல் தொழில் செய்யும் மக்களும் வாழ்கின்றார்கள். தற்போது மதுபானசாலைகளின் வருகை காரணமாக கள்ளு வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்பது ஒருபுறமிருக்க, அதைவிட மிகவும் முக்கியமான பிரச்சனை போரின் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல ஆயிரக்கணக்கான தென்னை, பனை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டது. இதனால் சீவல் தொழில் செய்யும் மக்கள் பலரும் தமது பரப்பரைத் தொழிலை இழந்து வருமானத்தைப் பெற முடியாது போராடும் நிலையில் இருக்கிறார்கள். போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் நச்சுப் பதார்தங்கள் கூட அப்பகுதியில் விவசாய நடவடிக்கையின் விளைச்சலைக் கட்டுப்படுத்தியே வருகிறது. இதனால் விவசாயத்தில் கூட போதிய விளைச்சல் இன்றி மக்கள் இன்றும் பல்வேறு வாழ்வாதார சிக்கல்களை எதிர்நோக்கியே வருகிறார்கள்.

இதுதவிர, போரின் கோரத்தாண்டவத்தால் பெற்றோரை இழந்து பிறரின் அரவணைப்பில் வளரும் மாணவர்கள், குடும்பத் தலைவனை இழந்து வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள மாணவர்கள் ஆகியோரின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. ஆண்கள் இருந்தும் தொழில் செய்ய முடியாத நிலை ஒரு புறம் இருக்க, பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொழில் இன்றியே வாழும் பரிதாப நிலை தொடர்கிறது. அவர்களுக்கான வாழ்வாதார கட்டமைப்புக்கள் எவையும் இதுவரை ஒழுக்காக அரசாங்கமும் சரி, மாகாணசபையும் சரி செய்யவில்லை. இதனால் நாளாந்த வயிற்றுப் பசியைக் கூட இந்தக் குடும்பங்கள் போக்க முடியாது திணறுகின்றது. வறுமைக்கு மத்தியிலும் படித்து சாதித்து விட வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் கடும் பசியுடன் பாடசாலை செல்கிறார்கள். ‘பசி வந்தால் பத்தும் பறந்திடும்’ என்பார்கள். அது போலவே மாணவர்கள் பசிக்கு மத்தியில் சென்று காலைப் பிரார்த்தனையில் பங்கேற்கின்ற போது பல மாணவர்கள் மயங்குகிறார்கள்.

தொடரும் இந்த அவலநிலைக்கு முடிவு தான் என்ன..? இந்த மாணவர்கள், குடும்பங்களின் வாழ்வில் மீண்டும் விருத்தியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது? என்பது சிந்திக்க வேண்டியதாகவுள்ளது. இந்நிலையில் வடக்கு, கிழக்கு பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்பட்டும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை நிறுவனம் லண்டன் நம்பிக்கை ஒளி தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இப்பாடசாலை மாணவர்களுக்கான காலை சாப்பாட்டை வழங்க முன்வந்துள்ளது. ஆனால் இந்த நிலை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கப் போவது என்பது ஒரு புறமிருக்க, பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் தவிர வீட்டில் உள்ள மற்றைய சின்னஞ் சிறு பிள்ளைகளின் நிலை பட்டினிப் போராட்டத்தால் தொடர்கிறது. இதற்கு முடிவு தான் என்ன௪? இந்த மக்களின் வாழ்வாதாரத்தை கட்டுவதற்கான உதவிகள் வழங்கப்படுவதன் மூலமே வளம் நிறைந்த முல்லைத்தீவை நாம் மீண்டும் பார்க்க முடியும். அதுவரை இம் மக்களின் வயிற்றுப் பசிக்கான பட்டினிப் போராட்டம் தொடரவே போகிறது.

இந்தப் பாடசாலை பழமை, பெருமை வாய்ந்த பாடசாலையாக காணப்பட்டாலும் தற்போது இந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பூதன்வயல், முறிப்பு, நீலகண்டபுரம், மாமூலை போன்ற பிரதேசங்களில் இருந்து நீண்ட தூரம் வந்து கல்வி கற்கின்றார்கள். இப்பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாக கூலி வேலை போன்ற தொழிலை தற்போது செய்து வருகின்றார்கள். இதனால் அவர்களின் குடும்பநிலமை மிகவும் வறுமைக்கு இடமாகியுள்ளது. அதனால் இந்த மாணவர்கள் போசாக்கற்றவர்களாக காணப்படுவதுடன் பசியுடனேயே பாடசாலை வருகிறார்கள். இதனைவிட கல்வி வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றும் அதனை முழுமையாக பயன்படுத்த முடியாதவர்களாகவுள்ளனர். மாணவர்களுக்கான காலை பிரார்த்தனையின் போது அவர்கள் சோர்ந்திருப்பது, மயங்கி விழுவது போன்ற பிரச்சனைகளையும், வகுப்பு பாடநேரங்களில் படிப்பில் அக்கறை செலுத்தாது சோர்ந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

அதிபர்
மு/ தண்ணீருற்று இலங்கை திருச்சபை த. க. பாடசாலை

Related Posts