முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டான்கேணி போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய 2,156ஏக்கர் மகாவலி எல் வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அரசாங்கத்தால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில்,
1984ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக அம்மக்கள் இடம்பெயரும்போது அக்காணிகள் அனைத்தும் அவர்களுடையதாயிருந்தது. அதுமாத்திரமின்றி 1984ஆம் ஆண்டு அந்தக் காணிகளே மக்களின் பொருளாதாரத்தை தீர்மானித்தன.
அவர்கள் வெளியேறி தற்போது 30 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்கள் மிள்குடியேறியபோது 2156 ஏக்கர் காணிகளும் பறிக்கப்பட்ட நிலையிலிருந்தன.
பறிக்கப்பட்ட நிலப்பரப்பில் 3 கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் 6 கிராமசேவகர் பிரிவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இக்கிராமத்து மக்கள் தமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். நாம் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்தபோதும் குறித்த நிலப்பரப்பு விடுதலைசெய்யப்படவில்லை.
அத்துடன், அரசாங்கம் காணிகளை மேலதிகமாக அபகரிக்கும் நடவடிக்கையில் இறங்கி வருகின்றது.
இந்நிலையில், வெலி ஓயா என்ற பிரிவுடன் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட ஒதியமலை பிரதேசத்தின் தனிக்கல் என்ற கிராமம் அபகரிக்கப்பட்டுள்ளது.