முல்லைத்தீவில் தொடரும் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் தமது காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் நடத்தி வருகின்ற போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கடந்த 31ம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, காணிகளைப் பொறுப்பேற்கச் சென்ற கேப்பாப்பிலவைச் சேர்ந்த 84 குடும்பங்களுடைய காணிகள் விடுவிக்கப்படாததையடுத்து இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை வரையில் அவகாசம் அளித்துள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால் காணி விடுவிப்பதற்காக நடத்தப்படும் போராட்டத்திற்காகத் தமது உயிரையும் மாய்த்துக் கொள்ள தயங்கப் போவதில்லை என தெரிவித்திருக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெறுகின்ற போராட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அதன் அலுவல்களை முடக்கும் வகையில் மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கின்றார்கள்.

கேப்பாப்பிலவு காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரச உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர், இன்று அங்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எனினும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Related Posts