முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களுக்கே முன்னுரிமை: எ.மரியராசா குற்றச்சாட்டு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டும் சட்டவிரோத தொழில்கள் அனைத்திற்கும் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களம் உறுதுணையாக இருக்கின்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையகத்தின் பொருளாளரும், முல்லைத் தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் முன்னாள் தலைவருமான எ.மரியராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“முல்லைத்தீவு மாவட்டத்தில் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி தென்னிலங்கை மீனவர்களால் தொழில் செய்யப்பட்டுவருகின்றது. இதேபோல் டைனமைற் பயன்படுத்தி மீன்பிடித்தல், வெளிச்சம்பாய்ச்சி மீன்படித்தல் போன்ற தடைசெய்யப்பட்ட தொழில்களும் செய்யப்பட்டே வருகின்றன.

இது தொடர்பாக பல தடவைகள் முறைப்பாடு கொடுத்தும் எந்தவிதமான பயனும் கிடைப்பதில்லை. மேலும் உழவு இயந்திரம் 21 கம்பான் அளவே பாயவேண்டும். ஆனால் 70 தொடக்கம் 80 கம்பான் வரை பாயப்படுகின்றது. இதேபோல் காலை 6 மணிக்கு வலைகள் போடப்பட்டு மாலை 6 மணிக்கே இழுக்கப்படுவதனால், அந்த பகுதியில் சிறு தொழில்களை செய்யும் மீனவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள்.

மேலும், உழவு இயந்திரத்தை பயன்படுத்துவதனால் கரையோரத்தில் உள்ள மணல் கிண்டப்பட்டு அந்த பகுதி பள்ளமாக மாறுவதுடன் கடல் அரிப்பை தடுப்பதற்கு கரையோரங்களில் இயற்கையாக வளர்ந்திருக்கும் அடம்பன் கொடிகளும் முழுமையாக அழிக்கப்படுகின்றது.

இதேபோல, உழவு இயந்திரங்களை பயன்படுத்துவதனால் 40 மனிதர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் இல்லாமல் போகின்றது. இந்த விடயங்கள் தொடர்பாக நாங்கள் பல தடவைகள் முறைப்பாடு கொடுத்தும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்களம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுத்திருக்கவில்லை.

அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கடற்றொழில் நீரியலவளத்துறை திணைக்களம் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்காக செயற்படாமல் தென்னிலங்கை மீனவர்களுக்காகவே செயற்படுகின்றது.

மேலும், கொக்கிளாய் பகுதியில் கரைவலைபாடு தொடர்பான பிரச்சினை எழுந்தபோது அது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அந்த விடயம் இறுதியாக சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டது.

அவர்கள் முல்லைத்தீவில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது மாவட்ட செயலர், கடற்றொழில் திணைக்களம் ஆகியன அங்கு சென்றிருக்கின்றன. அங்கு சென்ற கடற்றொழில் திணைக்களம் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு சார்பாக செயற்படாமல் தென்னிலங்கை மீனவர்களுக்கு சார்பாகவே செயற்பட்டிருக்கின்றது.” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related Posts