முல்லைத்தீவில் சிறுவனை நரபலி கொடுத்து புதையல் தோண்டப்பட்டதா?

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்னியன்குளத்தை அண்மித்த காட்டுப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளம் இடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியிலிருந்து சிறுவனொருவரின் பாடசாலை பாதணி ஜோடியொன்றும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், புதையல் தோண்டுவதற்காக சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த காட்டுப் பகுதியில் 8 அடி ஆழமான குழியொன்று வெட்டப்பட்டுள்ளதோடு, சேவல் ஒன்று வெட்டப்பட்டுள்ளமைக்கான அடையாளங்களும் பூஜைகள் நடைபெற்றமைக்கான தடயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காட்டுப்பகுதியினுள் பாடசாலை மாணவனின் பாதணி எவ்வாறு இருக்கமுடியும் என கேள்வி எழுப்பியுள்ள மக்கள் இது தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இப்பிரதேசத்தில் பல குற்றச்செயல்கள் நடைபெறுகின்ற போதிலும், பொலிஸார் அவற்றை கண்டுகொள்வதில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மல்லாவி பொலிஸாரை தொடர்புகொண்ட போது, கிராம மக்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் காட்டுப் பகுதியில் சோதனை நடத்தி அங்கிருந்து சம்பாத்து ஒன்றினை கண்டெடுத்ததாக தெரிவித்த பொலிஸார், ஆனால், சிறுவன் எவரும் காணாமல் போனமை தொடர்பாக தமக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப் பெறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது சிலரின் வதந்தியாக இருக்கக்கூடும் என்றும் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபடும் நபர்களே சப்பாத்தை இவ்வாறு விட்டு சென்றிருக்கக்கூடும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts