காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலைக் கோரியும் அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் நடத்திவரும் தொடர் போராட்டம் ஓராண்டு நிறைவடையும் நிலையில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாகக் கொட்டகை அமைத்துப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அன்றுமுதல் அவர்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களைப் பல்வேறு தரப்பினரும் சந்தித்துப் பேசியிருந்தபோதும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இன்றுடன் அவர்களின் போராட்டம் ஓராண்டை எட்டுகின்ற நிலையில் அதனை முன்னிட்டு அவர்கள் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், மதகுருமார், புத்திஜீவிகள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு ஆதரவு தர வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.