முல்லைத்தீவில் இளைஞன் வெட்டிக்கொலை! – குற்றத்தடுப்புப் பிரிவு தீவிர விசாரணை

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியிலிருந்து சென்ற விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை பகுதியிலுள்ள பனங்கூடலுக்குள் இருந்து குறித்த இளைஞனின் சடலத்தை பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுத்தனர்.

கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநிசன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலை முதல் மகனைக் காணவில்லையென குறித்த இளைஞரது தந்தை பல இடங்களிலும் தேடித் திரிந்துள்ளார்.

இந்நிலையில் பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று நெடுநேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த சிலர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பார்வையிட்டதுடன் அருகில் உள்ள பனங்கூடலுக்குள் சென்று பார்வையிட்டபோது கழுத்து அறுபட்ட நிலையில், வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் உடலை கண்டெடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த இளைஞனின் தந்தையும் கிராம மக்கள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் இறந்தது தனது மகன் என்பதை பொலிஸாருக்கு அடையாளங்காட்டினார்.

அதனை தொடர்ந்து விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கொலை நடந்த இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் லெனின்குமார் சடலத்தை பார்வையிட்ட பிறகு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Related Posts