முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது.
நேற்று (செவ்வாய்கிழமை) மாலை முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற இராணுவத்தின் நத்தார் கரோல் கீத நிகழ்வின் போது, புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பகுதிகளில் இராணுவம் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதிக்கு முன்னதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 84,523 ஏக்கர் காணியை இராணுவத்தினர் பயன்படுத்தியதாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 69,754 ஏக்கர் காணி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 263 ஏக்கர் காணி டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.