முல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்

முல்லைத்தீவு – செம்மலை – நாயாறு பகுதியில், கடந்த 7 வருடங்களாக தமிழ் மீனவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த, ஒருசில தென்னிலங்கை மீனவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதன்போது, சுனில் நிஷாந்த என்ற தனிநபருக்கு சொந்தமான பல மீன்பிடி படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் தமிழ் மீனவர்களின் 8 மீன்பிடிவாடிகளும், அங்கிருந்த படகுகள் உட்பட மீன்பிடி உபகரண்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் முல்லைத்தீவு செம்மலை நாயாறு பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது, சுனில் நிஷாந்த என்ற தனிநபரது, மீன்பிடி குழுவினரே இந்த நாசகார செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு சொந்தமான சில படகுகள் நேற்றுபலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், குறித்த நபர் தன்னுடைய முழுமையான மீன்பிடி படகுகளையும் அப்புறப்படுத்தவாரா என்பது குறித்து எதுவும் உறுதியாக கூறமுடியாதுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பகுதியில், இருந்து சொற்ப படகுகளே அப்புறப்படுத்தப்படுகின்ற போதிலும், நாயாறு முகத்துவாரம் பகுதியில் நிலைகொண்டுள்ள, 350 இற்கும் அதிகமான தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்களும், அவர்களின் படகுகளும் தொடர்ந்தும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.

எனினும் அவை அங்கிருந்து அப்புறப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நாயாற்று பகுதியில் இருந்து வெளிமாவட்ட மீனவர்கள் முற்றுமுழுதாக வெளியேற்றப்படும் சந்தர்ப்பத்திலேயே, தமக்கான வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும் என, நாயாறு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேற்ற காலத்திலிருந்து, வெளிமாவட்ட மீனவர்களிடம் தாம் போராடி வருவதாகவும், முல்லைத்தீவு ஏழை மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தென்னிலங்கை மீனவர்கள் வறியவர்களாக காணப்படவில்லை என்றும், அவர்கள் முதலாளிமார்களுக்கு கீழ் வேலை செய்பவர்களாகவும், இங்கு கிடைக்கின்ற வருமானம், தென்னிலங்கையைச் சேர்ந்த பணம் படைத்தவர்களிடமே செல்வதாகவும், முல்லைத்தீவு மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

Related Posts