முற்றுகைக்குள் உதயன் பணிமனை

உதயன் பணிமனை இன்று மதியம் முதல்  இராணுவத்தினரால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு, போக்குவரத்தும் தடை  செய்யப்பட்டுள்ளளது. இன்று காலை முதலே உதயன் பணிமனையைச் சூழ சிவில் உடையில் ஏராளமான புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.வாகனமொன்றை உதயனுக்கு அருகில் நிறுத்தி விட்டு, அதிலிருந்து இறங்கிய சிலர், ஆயுதங்களுடனும் காணப்பட்டனர்.உதயன் பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் அமைந்ததால், அது குறித்து அந்த வழியால் வாகனத்தில் வந்த பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆயினும் பொலிஸார் உதயன் பணியாளர்களை விசாரித்த பொலிஸார், சந்தேகத்துக்கு இடமான முறையில் அந்தப்பகுதியில் நடமாடியவர்களையோ, அவர்கள் வந்த வாகனத்தையோ  சோதனையிடாமல் தம் பாட்டில் சென்றுவிட்டனர். அதன் பின்னரும் குறித்த இனம்தெரியாத நபர்கள் பகிரங்கமாக நடமாடியதுடன் உதயன் பணிமனைக்கு வந்து செல்பவர்கள் பற்றி குறிப்பெடுத்தபடியே இருந்தனர்.

சிவில் உடையில் வந்த புலனாய்வாளர்கள் அவ்விடத்தை விட்டு அகன்ற சில நிமிடங்களில் கனரக வாகனங்களில் வந்திறங்கிய 50 க்கும் அதிகமான இராணுவத்தினர் உதயன் பணிமனைக்கான போக்குவரத்தை துண்டிக்கும் வகையில் கன்னாதிட்டி சந்தியிலும், நாவலர் சந்தியிலும் நின்று வாகனங்களையும் மக்களையும் திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளனர். இது குறித்து உதயன் குழுமத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் படையினரிடம் சென்று , கஸ்தூரியார் வீதியூடான போக்குவரத்தை எதற்குதடை செய்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு ‘இது மேலிடத்து உத்தரவு. உதயனுக்கு செல்லும் பாதையை தடை செய்யுமாறு சொல்லப்பட்டுள்ளதே தவிர எதற்காக இந்தத் தடை என்று எமக்குச் சொல்லப்படவில்லை’ என்று படையினர் பதிலளித்தனர்.

Related Posts