முறிகண்டியில் விபத்து: இராணுவ வீரரொருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் முறிகண்டி வசந்தநகர் சந்தியின் ஏ9 வீதியில் இடம்பெற்றிருந்தது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் ரக வாகனமொன்று முந்திச் செல்ல முற்பட்ட போது கப் வாகனம் திடிரென இயங்காமல் நின்றுள்ளதாகவும், இதனையடுத்து விபத்தை தவிர்க்கும் நோக்குடன் சாரதி பாரஊர்தியை செலுத்த முற்பட்ட வேளை கப் வாகனத்தில் இருந்து விழுந்த இராணுவ வீரர் ஒருவரது மீது பாரஊர்தி ஏறியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த 7 பேரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் இச்சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts