முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு இன்று விசாரணை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்த வழக்கின் விசாரணையை, இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு இன்று புதன்கிழமையன்று ​தொடங்குகிறது.

ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது.

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், மரண தண்டனையை குறைக்க மனுக்கொடுத்த மூவரும் விடுதலை தொடர்பில் எந்தவிதமான கோரிக்கையையும் முன்வைக்காத போது எதன் அடிப்படையில் தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தது என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில், விடுதலை செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரம், மாநில அரசுக்கு உள்ளதா அல்லது மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதா என்கிற வாதங்களும் தொடர்ந்தன.

இதற்குப் பிறகு, இந்த வழக்கை அரசியல்சாசன அமர்வு மேற்கொண்டு விசாரிக்கும் என்று அப்போது இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பில் இருந்த சதாசிவம் தலைமையிலான அமர்வு கூறியது.

ஓரிரு மாதத்தில் இந்த விசாரணை தொடங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஓராண்டு கழித்து இன்று விசாரணை இடம்பெறவுள்ளது.

முன்னதாக முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தூக்கு தண்டனை பெற்றிருந்தவர்களின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் தாமதமாக முடிவெடுத்தார் என்று கூறிய உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பெப்ரவரி 18ம் திகதியன்று, மொத்தமாக 15 கைதிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, ஆயுள் கைதிகளாக சிறைகளிலிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

Related Posts