முரளி வெற்றிக்கிண்ணம்; 2ஆம் நாள் போட்டி முடிவுகள்

இலங்கையிலுள்ள கிராமப்புறங்களில் விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள துடுப்பாட்ட வீரர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முரளி ஒற்றுமை கிண்ண இருபதுக்கு 20 துடுப்பாட்ட போட்டிகள், வட மாகாணத்திலுள்ள மைதானங்களில் கடந்த புதன்கிழமை (29) முதல் ஆரம்பமாகின.

வடக்கு கிழக்கு அணிகள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த பாடசாலைகளின் 16 ஆண்கள் அணிகளும் 8 பெண்கள் அணிகளும் இந்த சுற்றுப்போட்டியில் பங்குபற்றுகின்றன.

போட்டிகள் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரி, முல்லைத்தீவு ஐ.ஓ.டி.ஆர் (ஒட்டிசுட்டான்) ஆகிய மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.

முரளி ஒற்றுமை வெற்றிக்கிண்ணம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களும் சென்.பீற்றர் கல்லூரி சம்பியனாகியிருந்தது. வடக்கில் பெய்து வரும் பருவமழை காரணமாக சில போட்டிகள் நடைபெறாமல் இருப்பதுடன், சில போட்டிகள் பந்துபரிமாற்றங்கள் குறைக்கப்பட்டும் நடைபெற்றுள்ளன.

அதனடிப்படையில், வியாழக்கிழமை (30) நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் வருமாறு,

ஆண்கள் போட்டி முடிவுகள்

33 ஓட்டங்களால் ஆனந்தா கல்லூரி அணி வெற்றி

சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ஆனந்தா கல்லூரி அணியினை எதிர்த்து பிறின்ஸ் ஒவ் வோள்ஸ் கல்லூரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆனந்தா கல்லூரி 20 பந்துபரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது. எஸ்.அஸான் 71 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிறின்ஸ் ஒவ் வேர்ள்ஸ் கல்லூரி அணி 17.4 பந்துபரிமாற்றங்களில் 114 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

மேரிஷ் ஸ்டெல்லா அணி 7 ஓட்டங்களால் வெற்றி

ஓட்டிசுட்டான் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போட்டியில் மேரிஷ் ஸ்ரெல்லா கல்லூரி அணியை எதிர்த்து தேவபத்திராஜ கல்லூரி அணி மோதியது.

மழை பெய்த காரணத்தால் 5 பந்துபரிமாற்றங்கள் கொண்ட போட்டியாக இடம்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேரிஷ் ஸ்ரெல்லா கல்லூரி அணி 5 பந்துபரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து 40 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தேவபத்திராஜ கல்லூரி அணி 5 பந்துபரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 33 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

சீனிகம – சென்.பீற்றர்ஸ் ஆட்டம் சமநிலையில்

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் சீனிகம இணைந்த பாடசாலைகள் அணியை எதிர்த்து சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணி மோதியது. இந்த போட்டியும் மழை காரணமாக 8 பந்துபரிமாற்றங்கள் இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சீனிகம அணி 8 பந்துபரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.பீற்றர்ஸ் அணி 8 பந்துபரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 67 ஓட்டங்களையே பெற்றது.

இருந்தும், மேலதிக ஒரு பந்துபரிமாற்றம் கொடுக்கப்பட்டு அதில் சென்.பீற்றர்ஸ் அணி வெற்றிபெற்றது.

றிச்மண்ட் கல்லூரி 7 இலக்குகளால் வெற்றி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் காலி றிச்மண்ட் கல்லூரி அணியை எதிர்த்து கரந்தெனிய மத்திய கல்லூரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கரந்தெனிய மத்திய கல்லூரி அணி 20 பந்துபரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 120 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றிச்மண்ட் கல்லூரி அணி 13.5 பந்துபரிமாற்றங்களில் 3 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் கே.ஐ.சி.அஷலங்க 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

யாழ்ப்பாண இணைந்த அணிகள் 4 இலக்குகளால் வெற்றி

சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் யாழ்ப்பாண பாடசாலைகள் இணைந்த அணியுடன் சர்வதேச பாடசாலைகள் இணைந்த அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சர்வதேச பாடசாலைகள் இணைந்த அணி 19.2 பந்துபரிமாற்றங்களில் 72 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண பாடசாலைகள் இணைந்த அணி 18 பந்துபரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

பதுளை – மொனராகலை இணைந்த பாடசாலைகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றி

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பதுளை – மொனராகலை இணைந்த பாடசாலைகள் அணியை எதிர்த்து கிளிநொச்சி முல்லைத்தீவு இணைந்த பாடசாலைகள் அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பதுளை – மொனராகலை இணைந்த பாடசாலைகள் அணி 19 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 112 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி முல்லைத்தீவு இணைந்த பாடசாலைகள் அணி 19 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.


மொனராகலை இணைந்த அணிகள் 6 இலக்குகளால் வெற்றி

ஒட்டிசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் மொனராகலை இணைந்த பாடசாலைகள் அணியை எதிர்த்து மன்னார் வவுனியா இணைந்த பாடசாலைகள் அணி மோதியது. மழை காரணமாக 5 பந்துபரிமாற்றங்கள் கொண்ட போட்டியாக இந்த போட்டி இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மன்னார் வவுனியா இணைந்த பாடசாலைகள் அணி 5 பந்துபரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 37 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மொனராகலை இணைந்த பாடசாலைகள் அணி 3.5 பந்துபரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

திருகோணமலை – மட்டக்களப்பு இணைந்த அணி வெற்றி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் திருகோணமலை – மட்டக்களப்பு இணைந்த அணியை எதிர்த்து பண்டாரவளை சென்.தோமஸ் அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை – மட்டக்களப்பு இணைந்த அணி 19.4 பந்துபரிமாற்றங்களில் 121 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பி.டனிக் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.தோமஸ் அணி 15.1 பந்துபரிமாற்றங்களில் 66 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

தெரிவுப்போட்டிகள் நடைபெற்று தொடர்ந்து இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Related Posts