மும்பை சாலையை சுத்தமாக்கிய சச்சின்!

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தில் இணைந்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

sachin-clean-2

மகாத்மா காந்தியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான இந்தியாவைத் தூய்மைப் படுத்தும் இயக்கத்தை கடந்த வாரம் காந்தி ஜெயந்தி அன்று துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

அதன்படி, பள்ளிகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களை தூய்மையாக பேண வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

வரும் 2019ம் ஆண்டிற்குள் இத்திட்டத்தின் படி, தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோள் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

டெல்லியில் இத்திட்டத்தை துவக்கி வைத்த மோடி இத்திட்டத்தில் இணையுமாறு ஒன்பது பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார். சங்கிலித் தொடர் போல, அப்பிரபலங்கள் மேலும் தலா ஒன்பது பேருக்கு அழைப்பு விட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மோடி அழைத்த பிரபலங்களில் சச்சின், கமல், பிரியங்கா சோப்ரா, அமீர்கான் ஆகியோரும் அடக்கம். மோடியின் அழைப்பை ஏற்று அப்பிரபலங்கள் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது சச்சின் டெண்டுல்கரும் இத்திட்டத்தில் இணைந்துள்ளார். மும்பையில் சாலையினை தனது ரசிகர்களுடன் சேர்ந்து அவர் சுத்தம் செய்தார்.

sachin-celand

தூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்தது தொடர்பாக சச்சின் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியால் ‘தூய்மை இந்தியா’ பிரசாரத்தில் எனக்கு தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே நான் இங்கு எனது குழுவுடன் இங்கு வந்துள்ளேன். நாங்கள் இந்த பகுதியினை சுத்தம் செய்வோம்.

தூய்மை இந்தியா’ இயக்கத்தில் எனக்கு தலைமை பொறுப்பு கொடுக்கப்பட்ட தகவல் எங்களுக்கும், எனது பெற்றோர்களுக்கும் தெரியவந்ததும், என்னுடைய நண்பர்கள் அனைவரும் என்னிடம் வந்தார்கள், நாம் அனைவரும் களத்தில் இறங்கி பணியினை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

முடிந்தவரையில் இந்தியாவை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வோம். நாங்கள் சிறப்பாக பணியினை செய்து மேலும் பலரை இயக்கத்தில் இணைய செய்வோம்’ என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் தற்போது ராஜ்யசபா உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts