ஆசிய நாடுகளில் பரவலாக நடைபெற்றுவரும் தீவிரவாத தாக்குதல்களையடுத்து இலங்கையின் முப்படைகளும், புலனாய்வுப் பிரிவினரும் சர்வதேச புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
தற்போது, ஆசிய நாடுகளில் பரவலான தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுவரும்நிலையில் இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எந்தவித காரணம் கொண்டும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களை இலங்கையில் செயற்பட அனுமதிக்கப்போவதில்லையெனவும், இலங்கைக்குள் ஐஎஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் நடைபெறுகின்றதா என தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மேற்கு நாடுகளில் தொடர்ந்த தாக்குதல்கள் தற்போது ஆசிய நாடுகளை நோக்கித் திரும்பியுள்ளதாகவும், கடந்த வாரத்தில் மாத்திரம் பங்களாதேஷ், சவூதி அரேபியா, ஈராக் போன்ற நாடுகளில் நடாத்தப்பட்ட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஏனைய ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.