கடந்த சில நாட்களாக தொடர்ந்த சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளில் மூப்படையினரும் ஈடுபட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 409 நிவாரண முகாம்களில் படையினர் தமது உதவிகளை வழங்கி வருவதாக இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் ஈடுபடுகின்றனர்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதி, விசேட குழுவொன்றை அமைத்துள்ளார். முப்படை பிரதானிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ செயலாளர் உள்ளிட்டவர்களை கொண்டே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 146 முகாம்களும் வன்னியில் 87 முகாம்களும் கிளிநொச்சியில் 13முகாம்களும் மத்திய மாகாணத்தில் 105 முகாம்களும் மேல் மாகாணத்தில் 58 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. அந்து தங்கியிருப்போருக்கு இராணுவத்தினர் உதவிகளை வழங்கிவருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் விசேடமாக கடற்படையினர் மிகவும் சிறப்பாக தமது ஒத்துழைப்பை வழங்கினார்கள். இயற்கை அனர்த்தத்தின்போது காணமல் போன 304 பேரை கடற்படையினர் மாத்திரம் மீட்டுள்ளனர். இந்த பணிகளுக்காக 29 கடற்படை குழுக்களும் 64 படகுகளும் பயன்படுத்தப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு விமானப்படையினரும் மிக சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர்.
பிரதான நிவாரண முகாம்களுக்கு கிடைக்கும் நிவாரண பொருட்களைவிட உள்ளூர் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களுக்கு கிடைக்கப்பெறும் நிவாரண பொருட்கள் குறைவாகவே உள்ளன. எனவே நிவாரண உதவிகளை வழங்கும் பொதுமக்கள் உள்ளூரில் உள்ள முகாம்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்க முன்வரவேண்டும்.
இதே வேளை, உதவிகளை வழங்கவதற்காக கூடுதலானோர் நிவாரண முகாம்களுக்கு செல்வதனால் சில பிரதேசங்களில் வாகனங்களில் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால், நிவாரண முகாம்களுக்கு பொறுப்பாக உள்ள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டால் அதற்கான வசதிகளை படையினர் செய்து கொடுக்க தயாராக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை நிவாரண உதவிகள் தேவைப்படும் மக்கள் தமக்கு அறியதந்தால் அந்த பகுதிகளில் முகாம்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க இராணுவத்தினர் தயாராக உள்ளனர் என்றார்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் உதவிகளை வழங்குவதற்கு அந்த முகாம்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுடன் பொது மக்கள் தொடர்பு கொள்ள முடியும்.
லெப்.கேர்ணல் ரவிந்திர மகாவிட்ட – மின்னேரிய -0765303515
மேஜர் உபுல் பண்டார – திருகோணமலை – 0773049878, 0263266266
லெப்.கேர்ணல் ரோனி பெர்ணான்டோ – புணானை – 0771916387, 0273278973
லெப்.கேர்ணல் ஹரிண் வீரசிங்க – அம்பாறை – 0775371151, 0113090718
கேர்ணல் சந்திர பண்டார – அநுராதபுரம் – 0766907226
லெப்.கேர்ணல் எ. இலங்ககோண்- பதுளை – 077800470
மேஜர் துஷார குசும்சிரி – சிலாபம் – 0718470933
மேஜர் சம்பத் நல்லபெரும – குருநாகலை – 0773487588
லெப்.கேர்ணல் சனத் ஜயசூரிய – இரணைமடு – 0765303526