‘முன்னோக்கி நகர்வோம்’ வேலைத்திட்டம் யாழில் ஆரம்பித்து வைப்பு!

மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வட.மாகாணத்தினை மையப்படுத்தி ‘முன்னோக்கி நகர்வோம்’ எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்.கைலாசபிள்ளையார் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி வேலைத்திட்டம் வட.மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இச்செயற்திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குறிப்பிடுகையில்,”போர் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆன நிலையில், வட.மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களிற்கு வினைத்திறனான சேவை வழங்கல் தொடர்பில் மாகாண சபையும், மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்களும் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வட.மாகாண சபையின் கடந்த நான்கு வருட செயற்பாடுகள் மக்களிற்கு வினைத்திறன் உள்ளதாக அமையவில்லை என பரவலான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. அதேபோல், மத்திய அரசினுடைய நிறுவனங்களும் மக்களிற்கு சரியான சேவைகளை வழங்குவதில்லை என்ற குறைபாடுகளும் முன்வைக்கப்படுகின்றன.

அண்மையில் நடைபெற்ற தேர்தல் மூலம் தெரிவாகிய உள்ளூராட்சி சபைகள் கூட வினைத்திறனாகச் செயற்படுமா என்ற கேள்வி குறியும் இன்று வடபகுதி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்நிறுவனங்கள் வினைத்திறனுள்ளதாகவும், மக்களிற்குப் பயன்பாடுள்ளதாகவும் துரிதகதியிலான சேவைகளை வழங்குவதாகவும், செயற்படுகின்றனவா என்பதனை இணங்கண்டு கொள்ளவேண்டும்.

இவற்றிற்கான காரணிகளைக் கண்டறிந்து மக்கள் முன் கொண்டு வருவதன் மூலம் இவற்றின் செயற்பாடுகளை முன்நோக்கி நகர்த்துவதே இந்த செயற்திட்டத்தின் நோக்கமாக காணப்படுகின்றது’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts