முன்னேஸ்வரம் பூசகர் கடத்தப்பட்டார்

நீர்கொழும்பு, ஆண்டி அம்பலம பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய முன்னேஸ்வரம் கோயிலின் பிரதான பூசகர் (கப்பு மாத்தயா) மோட்டர் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண்டி அம்பலமவில் அமைந்துள்ள புஞ்சி முன்னேஸ்வரம் கோயிலின் பிரதான பூசாரியான வர்ணகுலசூரிய கம்கானாம்லாகே மனோஜ் துலாஞசன் என்பவரே கடத்தப்பட்டவராவார்.

இது தொடர்பாக பூசாரியின் மனைவியான மல்காந்தி என்பவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் மேலும் தெரிய வருவதாவது,
தேவாலய வேலைகள் முடிவடைந்தும் எங்களது இரண்டு குழந்தைகளுடன் நானும் கணவரும் எங்கள் வாகனத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தோம்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்திருந்த நபர்கள் வாகனத்தை இடைநடுவில் வைத்து மறித்தனர். அதன்போது எனது கணவர் ( பூசகர்) வாகனத்தின் கதவை திறந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் கறுப்பு நிற உடை அணிந்திருந்தனர்.

அவ்விருவரும் எனது கணவனை பிடித்து வாகனத்திற்கு வெளியே இழுத்தனர். நாங்கள் கூச்சலிட்டோம். எங்களையும் அச்சுறுத்திவிட்டு தாம் வந்த மோட்டார் சைக்கிளிலேயே அவர்கள் கணவனை கடத்திச் சென்றுவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட நபருக்கு, காணி மற்றும் பணம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாகவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்த நீர்கொழும்பு பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Related Posts