புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் (வயது 26), இனந்தெரியாத நபர்களினால் கைதுசெய்யப்பட்டு, கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான்கு வருடங்கள் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகியிருந்த தன்னுடைய மகனையே, இனந்தெரியாதோர் இவ்வாறு கைதுசெய்து, கடத்திச் சென்றுவிட்டதாக அவருடைய தாயார், பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். ‘வெள்ளைவான் ஒன்றில், புதன்கிழமை மாலை 3 மணியளவில் வந்த சிலர், முன்னாள் போராளியான தனது மகனை, கிளிநொச்சி ஏ-9 வீதி, 155ஆம் கட்டைப் பகுதியில் வைத்து, கைகளை பின்புறமாக விலங்கிட்டு அந்த வானிலேயே ஏற்றிச்சென்றுவிட்டனர்’ என்றும் அத்தாய் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனுக்கு கைவிலங்கிட்டு அழைத்துச்சென்றவர்கள் அவ்விடத்தில் வைத்தே அவரை அடித்து துன்புறுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனைத் தேடித் தேடி பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்தும் இதுவரை தனது மகனைக் காட்டவில்லை என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு பெற்றுத் திரும்பிய தன் மகன் சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்பதற்காக வட்டிக்குப் பணத்தை வாங்கி, பல்வேறான சிரமங்களுக்கு மத்தியில் ஆட்டோ (முச்சக்கரவண்டி) வாங்கிக்கொடுத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்தவர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாத நிலையில், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் வழங்கிய தகவலை அடுத்து, முன்னாள் போராளியின் உறவினர்கள், கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள பிராந்திய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்துக்கு சென்று விசாரித்துள்ளனர்.
எனினும், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு சென்று விசாரிக்குமாறு பிரதி பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்தில் இருந்தவர்களினால் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு உறவினர்கள் சென்று போதும், அங்கிருந்த பொலிஸாரும், இந்த விவகாரம் தொடர்பில் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று தெரிவித்துவிட்டதுடன், சிலவேளைகளில், வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரை கைது செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை,’கிளிநொச்சி – தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் என்பவரை, நீதிமன்றத்திலுள்ள வழக்கு ஒன்றுக்காகவே கிளிநொச்சி 155 ஆம் கட்டைப்பகுதியில் வைத்து, நாம் கைது செய்தோம்’ என கிளிநொச்சிப் பொலிஸார், நேற்று புதன்கிழமை (31) தெரிவித்தனர்.
‘திருட்டு நகை ஒன்று தொடர்பான கொடுக்கல் வாங்கல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபர் இவர்’ என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.