முன்னாள் போராளிகள் விவகாரம்: அமெரிக்க வைத்தியர்கள் மூலம் பரிசோதிக்க முடிவு

முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதா என்பதை அறிய அமெரிக்காவின் விமானப்படை மருத்துவர்கள் ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்னும் யோசனைக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

வடமாகாண சபையின் 58வது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இங்கு பேசிய மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம்,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக சர்வதேச மருத்துவர்களை கேட்கும் நாம், தற்போது யாழ். குடாநாட்டில் மருத்துவ முகாம்களை நடத்த வந்திருக்கும் அமெரிக்க விமான படை மருத்துவர்கள் ஊடாக முன்னாள் போராளிகளை பரிசோதித்தால் என்ன? என சிவாஜிலிங்கம் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மருத்துவ உதவி பொருட்களுடன் வந்த அமெரிக்க விமான படையினருடன் யாழ். வந்தபோது அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அடுல் கேஷாப்பிடம் இந்த விடயத்தை நான் கேட்டிருக்கின்றேன்.

அதற்கு அவர் இணக்கம் தெரிவித்தார். முன்னாள் போராளிகள் சிலரை தெரிவு செய்தால் பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

Related Posts