அநுராதபுரம் வில்பத்து பிராந்திய கஜபா படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் ஜயந்த சுரவீர உள்பட 4 இராணுவத்தினரும் 4 வன அலுவலர்களும் கொல்ப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சூரியகாந்தன் ஜெயச்சந்திரன் எனப்படும் உதயன் அல்லது ஐயன், சிவப்பிரகாசன் சிவசீலன் எனப்படும் இளையன் ஆகிய முன்னாள் போராளிகள் இருவருக்கே இந்தக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்கள் இருவர் மீதான 5 குற்றங்களுக்கும் தலா 5 ஆண்டுகள் வீதம் 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி மகேஸ் வீரமன், தண்டனையை 5 ஆண்டுகள் சமகாலத்தில் அனுபவிக்கும் வகையில் தீர்ப்பளித்தார்.
2007ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் திகதி வில்பத்து வனப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் வில்பத்து பிராந்திய கட்டளைத் தளபதி கேணல் ஜயந்த சுரவீர உள்பட 4 இராணுவத்தினரும் 4 வன அலுவலர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் சூரியகாந்தன் ஜெயச்சந்திரன் எனப்படும் உதயன் அல்லது ஐயன், சிவப்பிரகாசன் சிவசீலன் எனப்படும் இளையன் ஆகிய முன்னாள் போராளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவருக்கும் எதிராக 9 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றில் 2015ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது. நேற்றையதினம் இந்த வழக்கு தீர்ப்புக்காக அழைக்கப்பட்டது.
5 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என முன்னாள் போராளிகள் இருவரும் இனங்காணப்பட்டனர். அத்துடன், 4 குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படாததால் எதிரிகளை நிரபராதிகள் என மன்று தீர்ப்பளித்தது.
குற்றவாளிகள் என இனங்காணப்பட்ட 5 குற்றங்களில் ஒவ்வொன்றுக்கும் ஐந்து ஆண்டுகள் என்ற அடிப்படையில் 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி மகேஸ் வீரமன் தீர்ப்பளித்தார்.
5 குற்றங்களுக்குமான தண்டனையை குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்கும் வகையில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மன்று வழங்கியது.