முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி எவையும் ஏற்றப்படவில்லை

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி எவையும் ஏற்றப்படவில்லை என முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்ட போது, புனர்வாழ்வு மையத்தின் பொறுப்பாளராக தான் பதவி வகித்ததாகவும், அவர்களுக்கு எந்தவிதமான விஷ ஊசியும் ஏற்றப்படவில்லை என்பதை உறுதியாகத் கூறுவதாக சுசந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை திரியாய அரிசி மலையில், முப்படைகளின் கூட்டுப் பயிற்சியான ‘நீர்க்காகம்’ பயிற்சி இன்று காலை இடம்பெற்ற போது, இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது கண்காணிப்பின் கீழே முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு விஷ ஊசி ஏற்றப்பட்டிருப்பின், அவர்களைப் பரிசோதனை செய்து பார்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்தே புனர்வாழ்வு வழங்கியதாகவும் அவர்களுக்கு விச ஊசியோ அல்லது எந்தவிதமான சிகிச்சையோ வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வின் போது விஷ ஊசி ஏற்றப்பட்டதாக இராணுவம் மீது பலர் குற்றம் சாட்டி வருவதாகவும் அவ்வாறு விஷ ஊசி ஏற்றப்பட்டிருப்பின் பரிசோதனை செய்து பார்க்குமாறும் அதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற முப்படைகளின் பயிற்சி நடவடிக்கையின் போது, முப்படைகளின் தளபதிகள் மற்றும் சீனா, ஜப்பான், சூடான், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் இராணுவ வீரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts