வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் இந்த வாரமும் மேற்கொள்ளப்படவுள்ளன.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட வைத்தியசாலைகளிலும் கடந்த 2 ஆம் மாற்று 9 ஆம் திகதிகளில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி மீண்டும் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை இடம்பெறவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் நண்பகல் ஒரு மணிக்கும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் காலை 8 மணிக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மாலை 4.00 மணிக்கும் வைத்திய பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.
எனினும் யாழ்ப்பாண மாவட்ட போதனா வைத்தியசாலையில் இவ்வாரம் மருத்துவ பரிசோதனை நடைபெறமாட்டாது என அறிவித்துள்ள சுகாதார அமைச்சு, எதிர்காலத்தில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளது.