முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் பொலிஸார்!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த 2017ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருடைய விபரங்களை பெறுவதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் அவரது உறவினருக்கு கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இதன்போது குறித்த முன்னாள் போராளி எங்கு உள்ளார்? என்ன தொழில் புரிகின்றார்? திருமணமாகியுள்ளதா? போன்ற விபரங்களை பொலிஸார் கேட்டுப் பெற்றுள்ளதாக முன்னாள் போராளியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விபரங்களை சந்தேக கண்ணோட்டத்துடன் பொலிஸார் பெற்றுவருவது தமக்கு தர்ம சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் போராளியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கனகராயன்குளம் பகுதியில் பல இடங்களிலும் சமூகத்துடன் இணைந்துள்ள முன்னாள் போராளிகளின் விபரங்களை பல கோணங்களில் பொலிஸார் சிவில் உடையில் சென்று திரட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts