முன்னாள் பெண் புலி உறுப்பினர் உட்பட மூவர் கைது

வெள்ளவாய, கொடவெஹரகள பகுதியில் வைத்து புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர் உட்பட மூவர் வெள்ளவாய பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறித்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்ற வேளையிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபர் முல்லை தீவு பகுதியை சேர்ந்தவர் எனவும் ஏனையவர்கள் கொடவெஹரகள பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அடையாளங்காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 35 வயது முன்னாள் புலி உறுப்பினர் விடுதலைப்புலி பொலிஸ் அணியில் 1998 இலிருந்து 2002 வரை செயற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை, குறித்த பெண் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்ததை அடுத்து 2009 முதல் 2010 வரை புனர்வாழ்வு பெற்றுள்ளார்.

குறித்த பெண் அந்த பகுதிக்கு சென்ற காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலுக்கமைய வெள்ளவாய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts