ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீடொன்றில் முன்னர் புளொட் அலுவலகம் இருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் இருந்த காரணத்தினால் அந்த வீட்டில் இருந்த மானிப்பாயைச் சேரந்த சிவகுமார்(வயது 55) என்ற உறுப்பினர் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில் வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றின் கட்டளையின் பிரகாரம் கடந்த டிசெம்பர் 19ஆம் திகதி அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ். மாவட்ட நீதிமன்றப் பதிவாளருடன் யாழ்ப்பாணம் பொலிஸார் சென்று வீட்டில் இருந்த பொருட்களை வெளியேற்றும் பணியில் பொலிஸார் ஈடுபட்டனர்.
அதன்போது அலுமாரி ஒன்றுக்குள் பாவனைக்குட்படுத்தக்கூடிய ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் என்பன காணப்பட்டன. அவற்றினை பொலிஸார் மீட்டு அந்த வீட்டில் தங்கிருந்த நபரையும் பொலிஸார் கைது செய்ததுடன் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது செய்து விளக்கமறியலில் வைத்தனர்.
மேற்படி வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் சார்பில் கடந்த தவணையின் போது மன்றில் முன்னிலையான பெரும்பான்மையின சட்டத்தரணி மன்றில் ஆஜராகவில்லை என்பதனாலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.