கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடாசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்தமை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளார் ஊடாக அதிபரிடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளது.
இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் தொழிநுட்ப பீட திறப்பு விழாவிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விழாவிற்கு வடக்கு மாகாண சபை மக்கள் பிரதிநிதிகள் எவரும் அழைக்கப்படவில்லை.
எனவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதம விருந்தினராக அழைத்ததன் பின்னனி மற்றும் வடக்கு மாகாண சபை மக்கள் பிரதிநிதிகள் எவரையும் அழைக்காமை என்பவற்றுக்கான விளக்கத்தை பாடசாலை அதிபர் ஊடாக பெற்று தங்களின் அறிக்கையை அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரினால் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாடசாலை அதிபர் விக்கினராஜாவை தொடர்பு கொண்டு வினவிய போது,
பாடசாலைக்கு தொழிநுட்ப பீடம் வருவதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரே காரணமாக இருந்தார். அவரின் முயற்சினாலேயே பாடசாலைக்கு தொழிநுட்ப பீடம் கிடைத்தது.
அத்தோடு நாங்கள் தொழிநுட்ப பீட திறப்பு விழா செய்யவில்லை. சம்பிரதாயபூர்வ சமய நடவடிக்கைகளையே மேற்கொண்டோம். எனவே அதில் பாடசாலை சமூகத்தின் விருப்பின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை அழைத்திருந்தோம் எனத் தெரிவித்தார்.