வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணத்தில் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இலங்கை வந்துள்ள வரதராஜப்பெருமாள் தாம் கட்சி சாராத அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட உத்தேசித்துள்ளார் எனத் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை நல்லூரில் பொது நிகழ்வு ஒன்றில் அவர் உரையாற்றினார். இன்று மாலை ஈ.பி.ஆர்.எல்.எவ். நடத்தும் கூட்டம் ஒன்றில் அவர் பேசுகிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூர் வைமன் வீதியில் உள்ள ‘ஆறுதல்’ அலுவலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் ‘முதலமைச்சராக எனது அனுபவம்’ என்ற தலைப்பில் அவர் கருத்துரை வழங்குகிறார்.