முன்னகர்கிறது இராணுவப் பாதுகாப்பு வேலி; வலி. வடக்கு மக்கள் அச்சத்தில்

tellepplai_bundவலி. வடக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பாதுகாப்பு வேலிகளை 150 மீற்றர் தூரம் வரை முன்னகர்த்தும் பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த புதன்கிழமை முதல் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த முன் நகர்வால் விடுவிக்கப்பட்ட சில பகுதிகள் மீண்டும் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்கியுள்ளன.

வலி. வடக்கில் 24 கிராமசேவையாளர் பிரிவுகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளன. இந்த 24 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக உயர்பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி நிரந்தரப் பாதுகாப்பு வேலிகள் முதலில் அமைக்கப்பட்டன.

இந்தநிலையில் கடந்த புதன்கிழமை முதல், தொண்டமானாறு தொடங்கி காங்கேசன்துறை வரையான நிரந்தரப் பாதுகாப்பு வேலிக்கு உள்பக்கமாக உள்ள மண் அணை தரைமட்டமாக்கப்பட்டது. இதன்போது இதற்குள் அடங்கும் வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்குப் பின்புறமாக பளை வீமன்காமம் பாடசாலை அமைந்துள்ளது. இந்தப் பாடசாலையிலிருந்து கிட்டத்தட்ட 200 மீற்றருக்கு அப்பால் முதலில் நிரந்தரப் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாதுகாப்பு வேலிக்கு வெளியில் உள்ள பிரதேசத்தில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் நிரந்தரப் பாதுகாப்பு வேலிக்கு வெளியில் உள்ள மாவிட்டபுரம் புகையிரத நிலையத்தை புனரமைப்பதற்காகத் தண்ட வாளங்களும் போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல், நிரந்தரப் பாதுகாப்பு வேலியை முன்நகர்த்தும் நடவடிக்கையை படையினர் மேற்கொண்டுள்ளனர். இதன் பிரகாரம் முன்னர் வேலி இருந்த இடத்திலிருந்து 150 மீற்றர் வரை தற்போது முன்நகர்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நிரந்தரப் பாதுகாப்பு வேலி பளை வீமன்காமம் பாடசாலைக்கு மிக அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் படையினரால் மீளக்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட சில பகுதிகள் மீண்டும், நிரந்தரப் பாதுகாப்பு வேலிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய நிரந்தரப் பாதுகாப்பு வேலி ரயில் தண்டவாளத்துக்கு வெளிப்புறமாக காங்கேசன்துறை வரை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ரயில் பாதைப் புனரமைப்பிலும் பாதிப்பு ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts