முத்துராமலிங்கம் படத்தின் மொத்த கதையையும் போட்டு உடைத்த இயக்குனர்

கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘முத்துராமலிங்கம்’. இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்கி வருகிறார். இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் நெப்போலியன், பிரியா ஆனந்த், வம்சி கிருஷ்ணா, விவேக், சுமன், பெப்சி விஜயன், சிங்கம் புலி, சிங்கமுத்து என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் கதையை பற்றி இயக்குனர் கூறும்போது, கதாநாயகன் முத்துராமலிங்கத்தின் தந்தை சிலம்பம் கற்று தரும் பள்ளி நடத்தி வருபவர். ஒரு சமயம் திருநெல்வேலியில் நடக்கும் சிலம்பம் போட்டியில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அதில் கதாநாயகன் எதிரிகளை தாக்குகிறார்.

இதனால், வில்லன் காவல்துறையில் புகார் செய்ய, கைது செய்ய வரும் காவல் துறை அதிகாரிக்கும், கதாநாயகனின் தந்தைக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன்பிறகு, தந்தையோடு தலைமறைவாகிறார் கதாநாயகன். இவர்களை கைது செய்ய வரும் தனிப்படை போலீஸ் அதிகாரி அவர்களை பிடிக்கும் முயற்சியில் தோல்வியடைகிறார்.

கதாநாயகனோடு சிலம்பம் சண்டை செய்து ஜெயித்தால் அவனை கைது செய்யலாம் என கதாநாயகி சவால்விட, இந்த போட்டியில் அதிகாரியும், கதாநாயகனும் களம் இறங்குகிறார்கள். அதில் கதாநாயகன் வெற்றியடைந்து ஊரையும் தந்தையின் மானத்தையும் காப்பாற்றுகிறார். இதுதான் படத்தின் மொத்த கதை என்று கூறுகிறார்.

படத்தில் காவல்துறை அதிகாரியாக வம்சி கிருஷ்ணாவும். அவருக்கு சிலம்பம் பயிற்சி கொடுப்பவராக பெப்சி விஜயனும், மேலும், கவுதம் கார்த்திக்கின் அப்பாவாக நெப்போலியனும் நடித்துள்ளனர். இப்படத்தின் நாயகி ப்ரியா ஆனந்த் +2 படிப்பவராக வருகிறார். படம் முழுக்க பாவடை, தாவணியில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முத்துராமலிங்க தேவரைப் பற்றிய ஒரு பாடல் உள்ளது. அந்த பாடலை கமல்ஹாசன் பாடிக் கொடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

அதனால், படத்தில் உள்ளவர்கள் அனைவரும் நெல்லை தமிழில்தான் பேசுவார்களாம். மேலும், அங்கு நடக்கும் சிலம்பம் சண்டையையும் இப்படத்தில் மையப்படுத்தி காட்டியிருக்கிறார்களாம். சிலம்பம் கற்றுக் கொள்வதற்காக மிகுந்த சிரத்தை எடுத்து கற்றுக் கொண்டுள்ளார் கவுதம் கார்த்திக்.

Related Posts