கேரள மாநிலம் கொச்சியில் சில அமைப்பினர் கடந்த 2–ந்தேதி அன்பின் முத்தம் என்ற பெயரில் முத்தப் போராட்டம் நடத்தினர்.
இதற்கு கல்லூரி மாணவ–மாணவிகள் மத்தியில் ஆதரவும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியது. சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் குதித்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து பல்வேறு தரப்பினரும் இப்போராட்டம் குறித்து கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால், தனது வலைதளத்தில் இதுபற்றி வெளியிட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:–
பொதுமக்கள் தினமும் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதுபற்றி அரசியல்வாதிகள் அக்கறை காட்டுவது இல்லை. கலாச்சாரத்தை காப்பாற்றுவதாகக்கூறி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். சில அமைப்புகளும் இதில் தங்களை இணைத்து கொள்கின்றன.
மாணவர்களும், மாணவிகளும் பேசி கொள்வதற்கு தடை விதிப்பது சரி அல்ல. அதே நேரம் முத்தப் போராட்டம் என்ற பெயரில் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனால் யாருக்கு என்ன பயன்?
ஆண், பெண் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. நட்பு, அன்பு, சகோதர பாசம், தாய்–மகன் உறவு என எத்தனையோ பாச உறவுகள் உள்ளன. அவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், இதில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசியல் கட்சிகள் அக்கறை காட்டவில்லை. இது போன்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக போராட வேண்டும்.
முத்தமிடுவதும், முத்தமிடாமல் போவதும் அவரவர் உரிமை.
ஆனால், என் பார்வையில், நீ முத்தமிடக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.
ஒருவேளை இது போன்ற காட்சிகளை பார்ப்பவர்களுக்கு அது, அநாகரீகமாக தெரிந்தால் அவர்கள் அந்த இடத்தை விட்டு போய் விடலாம். இதுதான் அறிவார்ந்த செயலாக இருக்கும் என கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.