இலங்கையில் முதியவர்களுக்கு என்று தனியான வைத்தியசாலை இதுவரை அமைக்கப்படவில்லை.எனினும் தனியான வைத்தியசாலை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி தெரிவித்தார். முதியோர்களுக்கு வலுவான அமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான கலந்துரையாடலும் உபகுழு தெரிவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முதியவர்களுக்கு என்று நாடளாவிய ரீதியில் தனியான வைத்தியசாலை இதுவரை அமைக்கப்படவில்லை. ஆனாலும் வைத்தியசாலையினை அமைப்பது தொடர்பில் உயர் மட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றது. அதற்கமைய எதிர்காலத்தில் அவ்வாறான வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டால் முதியவர்களின் நலன் பாதுகாக்கப்படும்.
தற்போது முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. அத்துடன் நோய் தாக்கமும் அதிகரித்துள்ளது. எனினும் யாழ். போதனா வைத்தியசாலையினை பொறுத்தவரையில் முதியவர்களுக்கு என தனியான மருந்து பெறும் இடம் வெளிநோயாளர் பிரிவில் உள்ளது. எனினும் அங்கு வருபவர்கள் அனைவரும் முதியவர்களாக இருப்பதனால் யாருக்கு முன்னுரிமை வழங்குவது என்பது கடினமானது.
அத்துடன் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையின் படி முதியவர்கள், கற்பிணி தாய்மார்கள், சிறியவர்கள், பாடசாலை மாணவர்கள் , பாதுகாப்பு தரப்பினர் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு செயற்படுவதில் நாம் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றோம்.
எனவே தற்போது இருக்கக் கூடிய வைத்தியசாலைகளில் ஒன்றினையோ அல்லது மாவட்ட மட்டத்திலோ தெரிவு செய்து அங்கு முதியவர்களுக்கு என தனியான பிரிவினை அமைக்க முடியும். எனினும் இதனை நாம் பரிந்துரைக்க முடியாது உயர் மட்டத்தினாலேயே முடியும். அவ்வாறு அமைந்தால் முதியவர்களைப் பராமரிப்பது என்பது நல்ல விடயம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்