முதல் போட்டியிலேயே மண்ணைக் கவ்வியது இலங்கை

உலகக் கிண்ணத் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொண்ட இலங்கை அணி 98 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.

Sri Lanka v New Zealand - 2015 ICC Cricket World Cup

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் இன்று அதிகாலை நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது.

இப்போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த களமிறங்கின.

முதலில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதன்படி துடுப்புடன் மைதானத்துக்குள் இறங்கிய நியூசிலாந்து அணி சார்பாக, மெக்கல்லம் 65 ஓட்டங்களையும், கப்தில் 49 ஓட்டங்களையும், கோரி அன்றசன் 75 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 57 ஓட்டங்களையும் விளாசித்தள்ளினர்.

பின்னர் 50 ஓவர்கள் நிறைவில் அந்த அணி, ஆறு விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் மற்றும் அஜந்த மென்டிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதனையடுத்து 332 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி துடுப்புடன் களமிறங்கிய இலங்கைக்கு, லகிரு திரிமானே 65 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

எனினும் ஏனைய வீரர்கள் எவரும் அரைச் சதம் கூட பெறாத நிலையில் வௌியேற 46.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை 233 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக கோரி அன்றசன் தெரிவானர்

இலங்கை அணி இன்றைய போட்டியில் தோல்வியைத் தழுவிய போதும், குமார் சங்கக்கார ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற இரண்டாவது இடத்தை தனதாக்கி சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் 39 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட அவர், இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த அவுஸ்திரேலிய வீரர் ரிக்கி பொண்டிங்கை (13708 ஓட்டங்கள்) பின்தள்ளியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் சங்கக்கார தற்போது குவித்துள்ள ஓட்டங்கள் 13714.

இதேவேளை 18,426 ஓட்டங்களை ஒருநாள் போட்டிகளில் குவித்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 342 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் அதிகப்படியாக பின்ஜ் 135 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

Related Posts