முதல் டெஸ்ட் முதலாவது இன்னிங்சில் 201 ரன்களில் சுருண்ட இந்தியா!

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 201 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

amla

தொடக்க வீரர் முரளி விஜய் மட்டும் தாக்குப்பிடித்து ஆடி அதிகபட்சமாக 75 ரன்கள் விளாசினார். முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவும் தடுமாறியது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் எடுத்துள்ளது.

மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா கிரிக்கெட் தொடரில் ஆடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துவருகிறது தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி.

டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கிலும் தென்ஆப்பிரிக்க அணி கைப்பற்றிவிட்டது.

தற்போது, 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட், பஞ்சாப் மாநிலம், மொகாலியில் நேற்று தொடங்கி உள்ளது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். முரளி விஜய், தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 4 பந்துகளை மட்டுமே சந்தித்த தவான், பிளான்டர் பந்து வீச்சில் ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.

அதைத்தொடர்ந்து, இந்தியா நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. புஜாரா 31, கோஹ்லி, 1, ரஹானே 15, ரவீந்திர ஜடேஜா 38 ரன்கள் எடுத்தனர்.

விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா டக் அவுட்டானார். தேனீர் இடைவேளை முடிந்த சிறிது நேரத்திலேயே இந்தியா 201 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் ஆட்டம் இழக்காமல் 20 ரன்களுடன் களத்தில் நின்றார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில், சுழற்பந்து வீச்சாளர் டீன் எல்கர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸ்சை ஆரம்பித்தது. முதல் ஓவரையே சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் வீசினார். அடுத்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசினார். வருண் ஆரோன், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகியோரையும் அடுத்தடுத்து பந்து வீச வைத்து தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை குழப்பமடையச் செய்தார் கோஹ்லி.

இதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. நேற்றய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 28 ரன்கள் மட்டுமே எடுத்து சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிவந்தது.

எல்கர் 13 ரன்களுடனும், ஹசிம் ஆம்லா 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஸ்டியான் வான் ஜைல் 5 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். டுப்ளசிஸ் ஜடேஜா பந்தில் கிளீன் பௌல்ட் முறையில் டக் அவுட் ஆனார்.

Related Posts