முதல் டெஸ்ட்ல் இந்தியா அபார வெற்றி!

தென் ஆப்பிரிக்காவுக்கான எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Amit Mishra and Virat Kohli

3-ம் நாளான இன்று இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 200 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி இந்த டெஸ்ட் போட்டியில் ஜெயிக்க 218 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மொஹாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 68 ஓவர்களில் 201 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 184 ரன்களில் சுருண்டதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்தது. புஜாரா 63, கோலி 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

3-ம் நாளான இன்று புஜாராவும் கோலியும் நிதானமாக ஆடத் தொடங்கினார்கள். எக்காரணம் கொண்டு விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள். காயம் ஏற்பட்டதால் ஸ்டெய்ன் இந்த இன்னிங்ஸில் பவுலிங் செய்யவில்லை. அதனால் தென் ஆப்பிரிக்க வீரர்களும் துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். முதல் ஒரு மணி நேரத்தில் 15 ஓவர்களில் 36 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்கள். ஆனால் ஆட்டத்தின் 56-வது ஓவரில் திருப்பம் ஏற்பட்டது.

29 ரன்களில், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கோலி. அதன்பிறகு ஆட்டத்தில் திடீரென தென் ஆப்பிரிக்காவின் ஆதிக்கம் உருவானது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. இந்திய அணிக்குப் பெரிய பலமாக விளங்கிய புஜாரா 77 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ரஹானேவின் விக்கெட்டும் (2 ரன்கள்) பறிபோனது. பிறகு ஜடேஜா 8 ரன்களிலும் மிஸ்ரா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். வந்த வேகத்தில் இந்திய வீரர்கள் பெவிலியன் திரும்பியதால் இந்திய ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள். உணவு இடைவேளை நெருங்கும்போது 3 ரன்களில் அஸ்வினும் அவுட் ஆனார். இதனால் 24 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்து 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் என்கிற நிலைமைக்குச் சென்றது.

உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 69.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. சஹா 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்திய பவுலர்கள் பேட்டிங்கில் கெட்டிக்காரர்கள் இல்லை என்பது அறியப்பட்ட விஷயம். அது இந்த டெஸ்ட் மேட்சிலும் நிரூபமானது. உணவு இடைவேளைக்குப் பிறகு 1 ரன்னில் அவுட் ஆனார் உமேஷ் யாதவ். சஹா சிறிது ரன்கள் சேர்த்து இந்திய அணி 200 ரன்களை எட்ட உதவினார். அவர் கடைசியாக, 20 ரன்களில் இம்ரான் தாஹிரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில், 75.2 ஓவர்களில், 200 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தாஹிர், ஹார்மர் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 218 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

இந்தியாவின் இந்த ஸ்கோர் மிகவும் ஏமாற்றமானதாகும். முதல் ஒரு மணி நேரத்தில் புஜாராவும் கோலியும் ஆடிய விதத்தைப் பார்த்தபோது, எப்படியும் 300 ரன்கள் முன்னிலை கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், சீட்டுக்கட்டுகள் சரிவதுபோல கோலியின் விக்கெட்டுக்குப் பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் மிகவும் எளிதாக வீழ்ந்துவிட்டன. ஸ்டெயின் இல்லாதபோதும் நிலைதடுமாறாமல் பந்துவீசிய தென் ஆப்பிரிக்கா அணியினரின் பந்துவீச்சு பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

இந்த பிட்ச்சில் இந்த இலக்கை எட்டுவது கடினம் என்பதால் எல்கர் – பிளாண்டர் என்கிற புதிய கூட்டணியுடன் களமிறங்கியது தென் ஆப்பிரிக்க அணி. ஆனால் இந்த உத்தியைத் தவிடுபொடியாக்கினார்கள் இந்திய பவுலர்கள். 2-வது ஓவரை வீசவந்த ஜடேஜா, முதல் பந்திலேயே பிளாண்டரின் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் டுபிளெஸ்ஸியின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். அதற்கடுத்த ஓவரில் ஆம்லா ஜடேஜாவின் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார். ஜடேஜாவின் பந்து டர்ன் ஆகும் என எதிர்பார்த்த ஆம்லா ஏமாற்றத்துக்கு ஆளாகி விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

டிவில்லியர்ஸ் வேகமாக ஆட முயற்சி செய்தார். ஆனால் மிஸ்ரா இந்தமுறையும் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார். தொடக்க வீரர் எல்கர் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி, 16 ரன்களில் ஆரோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தேநீர் இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்து நெருக்கடியான நிலையில் உள்ளது.

இதன்பிறகு விலாஸ் 7 ரன்களில் அவுட் ஆனார். வான் ஸிலும் ஹார்மரும் சிறிது நேரம் நிலைத்து ஆடினார்கள். 36-வது ஓவரில் ஹார்மரின் விக்கெட்டைக் கைப்பற்றினார் ஜடேஜா. ஹார்மர் 11 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் வான் ஸில். அவர் 36 ரன்கள் எடுத்தார். காயம் ஏற்பட்டதால் பவுலிங் செய்யாத ஸ்டெய்ன், பேட்டிங் ஆட வந்தார். அவரும் நீண்டநேரம் ஆடவில்லை. 2 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசியாக, இம்ரான் தாஹிரின் விக்கெட்டைக் கைப்பற்றினார் ஜடேஜா. அதன்மூலம் அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்தியா.

Related Posts