முதல் இடப்பெயர்வு நிகழ்ந்து இன்றுடன் கால் நூற்றாண்டு

யாழ். குடாநாட்டின் முதலாவது இடப்பெயர்வு நிகழ்ந்து இன்றுடன் 24 ஆண்டுகள் பூர்த்தியாகி உள்ளன.

akathee-edappayarvu

24 ஆண்டுகளாக தொடர்ந்து அகதி முகாம்களிலேயே அவல வாழ்வு வாழ்ந்து வரும் வலி.வடக்கு மக்கள் இன்று 25 ஆவது ஆண்டுக்குள் கால் வைக்கின்றனர். அவர்களது வாழ்வில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் வாழ்வாதாரம் இழந்தவர்களாக இனி இழப்பதற்கு எதுவுமே இல்லாதவர்களாக பெரும் மனக் கிலேசத்துடன் அவர்கள் இந்தக் கால் நூற்றாண்டுக்குள் பிரவேசிக்கின்றனர்.

தமது சொந்த நிலத்தை மீட்பதற்காக அவர்கள் நடத்திய போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் என அனைத்துமே ஆயுதமுனையில், ஆட்சியாளர்களால் அடக்கப் பட்ட போதும் தமது மன உறுதியிலிருந்து சிறிதும் தளராதவர்களாக அவர்கள் உள்ளனர்.

தமது சொந்த நிலங்களை அடை வதே அவர்களது மனதில் இன்றும் இருக்கும் குறிக்கோளாக உள்ளது. “கடந்த 24 வருடங்களில் நாம் இழந்தவை அதிகம்.இழப்பதற்கு எம்மிடம் இனி எதுவுமில்லை.

விரைவில் நாம் எமது சொந்த நிலத்துக்குத் திரும்புவோம்” என்று மன உறுதியுடன் தெரிவித்துள்ளார் வலி.வடக்கு மீள் குடியேற்றப் புனர்வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம்.

வலி.வடக்கு மக்கள் இடம் பெயர்ந்து இன்றுடன் 24 வருடங்கள் நிறைவடைந்து, கால் நூற்றாண்டு ஆரம்பிக்கின்றது. இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே குணபாலசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

1990 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் பிற்பகல் 3 மணியளவில் வலி.வடக்கு மக்கள் யாவரும் இடம்பெயர்ந்தனர். ஒரே நாளில் அத்தனை ஆயிரம் மக்களும் தமது நிலங்களை விட்டு வெளியேறினர். இடப்பெயர்வின் போது இராணுவத்தினரின் உலங்கு வானூர்தி தாக்குதலில் 12 பேரை நாம் பறிகொடுத்திருந்தோம். அன்று தொடங்கிய இடப்பெயர்வு வாழ்வு இன்னும் முடிவடைவதாகத் தெரியவில்லை.

24 ஆண்டுகளாக எங்கள் நிலங்களை நாங்கள் பார்க்கவில்லை. அரசும், இராணுவமும் எங்களுக்கு அனுமதி தரவில்லை. இந்த 24 ஆண்டுகளில் நாம் நிறையவற்றை இழந்துவிட்டோம்.அகதிகள் என்ற முத்திரையுடன் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வீடுகள் நிலங்களில் மாறி மாறி இருந்தாலும் அகதி என்ற முத்திரை மாத்திரம் இன்னமும் எங்களுடனேயே இருக்கின்றது. எங்கள் வாழ்வின் விடிவெள்ளியைக் காணாது நாங்கள் தேடுகின்றோம்.இறுதிப் போரில் இடம்பெயர்ந்த மக்களே படிப்படியாக குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

ஆனால் இலங்கையில் முதன் முதலாக இடம்பெயர்ந்த நாம் மாத்திரம் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படவில்லை.நாம் தான் இறுதியாக மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என்பதுதான் எங்களின் விதியோ தெரியவில்லை.

எங்களின் மீன் வளம், நில வளம் எல்லாவற்றையும் இழந்து வாழ்வாதாரத்தையும் தொலைத்துவிட்டோம். இழப்பதற்கு எம்மிடம் இனியும் எதுவும் இல்லை. அநியாயம் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க முடியாது.

அதற்கு முடிவு கட்டப்படும் காலம் கனிந்து வருகின்றது. நாம் விரைவில் எமது மண்ணில் கால் மிதிப்போம் என்று கூரியுள்ளார்.

Related Posts