முதல்வர் ஜெயலலிதா 30-ந் தேதி ஆஜராக கோர்ட் உத்தரவு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் வரும் 30-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

jayalalithaa-sasikala

முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக இருந்த சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின், வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாததால் கடந்த 1996ல், அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

இதிலிருந்து தங்களை விடுவிக்க கோரி, அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி ஆனது. இதை எதிர்த்து, இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஜனவரியில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரி தொடர்பான வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், மேலும் மூன்று மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 28ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமார், ‘இந்த வழக்கை முடிக்க ஜூன் 6ம் தேதி முதல் மேலும் 3 வாரங்களுக்கு கால அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் முடிந்த பிறகுதான், ஜெயலலிதா, சசிகலா ஆஜராவது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது’ என்றார். அதற்கு சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில், நீதிபதியிடம் ‘வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடைமுறை முடியாது. எனவே, மே 16ந் தேதிக்கு பிறகே அவர்கள் ஆஜராவது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்’ என்றார்.இதை ஏற்று கொண்ட மாஜிஸ்திரேட், இந்த வழக்கில் ஜெயலலிதாவும், சசிகலாவும் எப்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென மே 19ம் தேதி முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.

வழக்கு மே 19ல் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை தள்ளிவைத்த மாஜிஸ்திரேட் இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆஜராகும் தேதி ஜூன் 3ம் தேதி முடிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டார். அதன் பின்னர் நேற்று இருவரும் நீதிமன்றத்தில் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த வாரம் மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆனால் நேற்றும் இருவரும் ஆஜராகவில்லை. நேற்றய விசாரணையின் முடிவில் வரும் 30-ந் தேதி ஜெயலலிதா, சசிகலா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.

Related Posts