வடமாகாணத்தில் புதிய அதிபர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட நியமனங்களை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
வடமாகாணத்தில் இருந்து அதிபர் தரம் – III போட்டி பரீட்சையில் 398 பேர் சித்தி பெற்றிருந்தனர். அவர்களில் 84 பேருக்கு நேர்முகப்பரீட்சை மூலம் அதிபர் வெற்றிடம் உள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கியிருந்தோம். அவர்கள் கடந்த 5 ஆம் திகதி தமது கடமையைப் பெறுப்பேற்றுக் கொண்டனர்.
எனினும் பாடசாலைகள் வழங்கப்படாத ஏனைய அதிபர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் நியமனம் வழங்க வேண்டும் எனவும் வழங்கப்பட்ட நியமனங்களை இரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதலமைச்சரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய அண்மையில் புதிதாக வழங்கப்பட்ட 84 பேருடைய நியமனங்களை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற நேற்று முன் தினம் 2 ஆவது கடிதத்தில் மத்திய அரசின் சுற்று நிரூபம் வரும் வரை நியமனங்கள் எவையும் வழங்கப்பட வேண்டாம் எனவும் வழங்கப்பட்ட நியமனங்களை உடனடியாக இரத்து செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
அதிபர் தரம் – III போட்டிப் பரீட்சையில் வடமாகாணத்தில் இருந்து 398 பேர் சித்தியடைந்திருந்தனர். கடந்த மே மாதம் அவர்களிற்குரிய பயிற்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடமை நிறைவேற்று அதிபர் தொடர்பாகவும், தரம் பெற்ற அதிபர் தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக புதிய அதிபர்களுக்கான நியமனத்தை இடைநிறுத்தி வைக்குமாறு கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வடமாகாணக் கல்வி அமைச்சினால் அண்மையில் மேற்குறித்த தரத்திலான அதிபர்களில் 84 பேருக்கு அண்மையில் அதிபர் நியமனம் வழங்கப்பட்டடுள்ளது.
இந் நிலையில் குறித்த நியமனம் சட்டவலு அற்றது எனவும் இது வடமாகாணத்தில் மட்டுமே நடைபெற்றுள்ளது. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் 84 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறித்த நியமனங்களை இரத்து செய்து, ஒரே நேரத்தில் அனைத்து அதிபர்களுக்கும் நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும் புதிய அதிபர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அத்துடன் கல்வி அமைச்சின் சுற்று நிரூபம் வராமல் நியமனம் வழங்குவது தவறு எனவும் இவ்வாறு நியமனங்கள் வழங்குவது எமது சேவைக்காலத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிடமும் வட மாகாணக் கல்வி அமைச்சிடமும் முறைப்பாடு செய்திருந்தனர்.
குறித்த கோரிக்கையை பரீசிலித்த முதலமைச்சர் மத்திய கல்வி அமைச்சின் நியமன விதிமுறை ஒழுங்குகள் கிடைக்கும் வரை அதிபர் நியமனங்களை வழங்க வேண்டாம் எனவும் வழங்கப்பட்ட புதிய நியமனங்களை இரத்து செய்யும் படியும் வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் கடந்த 5 ஆம் திகதி வழங்கப்பட்ட புதிய நியமனங்கள் அனைத்தையும் உடனடியாக இரத்து செய்ய வடமாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.