முதல்வரானால் ஊதியம் பெறாமல் பணியாற்றுவேன்: தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன்

மாநகரசபை முதல்வராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாமல் பணியாற்றுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன் இன்று அறிவித்தார்.

தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரவையினால் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

துணை முதல்வர் வேட்பாளராக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆரோக்கியநாதன் தீபன்திலீசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவை தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு இன்று 26.12.2017 செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கட்சித் தலைவர் கஜேந்திரகுமா் பொன்னம்பலத்தினால் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உரைாயற்றிய யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கள் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரைவ வடக்கு கிழக்கு முழுவதும் போட்டியிடுகின்றது. தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம்வகிக்கின்ற பல பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து போட்டியிடுகின்றன. இவற்றுடன் 10 பொது அமைப்புக்களின் கூட்டான தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் நம்பிகள் நல்வாழ்வுக் கழகம் தமிழர் வாழவுரிமை இயக்கம் ஆகியன இணைந்து போட்டியிடுகின்றன.

இவற்றைவிட வேறு பல அமைப்புக்களும் எங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. அவ் அமைப்புக்களின் யாப்பின் அடிப்படையில் பகிரங்க அரசியல் ஆதரவு வழங்க முடியாது என்பதால் அவற்றின் விபரங்களை உத்தியோகபூர்வ விபரங்களை வெளியிட முடியாதுள்ளோம்.

இந்தத் தேர்தலிலே நாங்கள் தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம்.

தூய கரங்கள் என்கின்ற போழுது நாங்கள் மக்களினால் தேர்ந்தொடுக்கப்பட்டு யாழ் மாநகரசபையினைக் கைப்பற்றுவோமாக இருந்தால் எந்தவிதமான கறையும் படியாத இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத இலஞ்ச ஊழலை முற்றாக ஒழிக்கின்ற ஒரு சபையை நாங்கள் உருவாக்கி நிர்வகிப்போம். தூய நகரம் என்கின்றபோழுது தூய்மையான காற்று துய்மையான நீர் துய்மையான நிலம் என்கின்ற விடயங்களை யாழ் மாநகருக்குள் அமுல்படுத்துவோம். இலங்கையின் முன்மாதிரியான நகரமாக யாழ் நகரம் மாற்றியமைக்கப்படும். இத்திட்டங்களை ஏனைய பிரதேச சபைகளுக்கும் அமுல்ப்படுத்துவோம்.

எமது ஆட்சியில் இன,மத, சாதி பாகுபாடுகள் இன்றிய ஒரு சமத்துவ நிலை பேணப்படும்.
நாங்கள் சபைகளைக் கைப்பற்றினால் எங்களுக்கு வாக்களிக்காத பிரதேச மக்களது பிரதேசங்களினது அபிவிருத்திக்கும் முன்னுரிமையளிப்போம். சகல பிரதேசங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும்.
நாங்கள் சபைகளைக் கைப்பற்றும் பட்சத்தில் சபைக்குத் தெரிவுசெய்யப்படும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து திட்டங்களை வகுத்து பணியாற்றுவோம். அவர்கள் மாற்றுக்கட்சிக்காரர்கள் என்ற ஒதுக்கல் நிலைப்பாடு அறவே நீக்கப்படும்.

மாநகரசபையின் முதல்வராக தேர்ந்தொடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாது பணியாற்றுவேன். மாநகரசபையினூடாக எனக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும். அதிலிருந்து ஒரு சதம் கூட எனக்கென எடுக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்குகின்றேன்.

முன்னைய சபைகளை ஆட்சிசெய்தவர்கள் போல எங்களுக்குள்ளே அடிபட்டுக்கொண்டு நீதிமன்றம் செல்லாத மிகக் கட்டமைக்கப்பட்ட நேர்த்தியான சபையை உருவாக்கி வழிநடத்திச் செல்வோம். கடந்த ஆட்சியில் தமது கட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டதே அதிகம் காணப்பட்டது. மற்றைய கட்சிகளில் ஆசனப் பங்கீடு தொடங்கும்பொது அடிபாடு தொடங்கிவிட்டது. அவர்கள் ஆட்சியமைத்தால் இந்த அடிபாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

பின்தங்கிய நிலையில் இருந்த சிங்கப்பூர், டுபாய் போன்ற நகரங்கள் எவ்வளவு வேகமாக கட்டியெழுப்பப்பட்டதோ அதே போன்று உடனடியாக சாத்தியமில்லாதபோதிலும் அதனை இலக்காக வைத்து யாழ் நகரைக் கட்டியெழுப்புவோம். அதற்கென அந்நாடுகளின் நிபுணத்துவ ஆலோசனைகள் பெறப்படும்.
நிதிக் கையாளுகைகளுக்காக பொருத்தமான நிபுணர்களிடமிரந்த ஆலோசனைனகள் பெறப்பட்டு குழுக்கள் நியமிக்கப்படும்.

யாழ் நகரை சர்வதேச நகரம் ஒன்றுடன் இணைத்து இங்குள்ள கட்டமைப்புக்களைப் பலப்படுத்துவோம்.
நாங்கள் என்னென்ன விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவோம் என்கின்ற விபரங்களை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின்போது நாங்கள் மக்களுக்கு சமர்ப்பிப்போம்”- என்றார்.

Related Posts