நச்சுப் பொருட்களை உட்கொண்ட, திரவங்களை அருந்திய, விஷ ஜந்துக்களின் கடிக்கு உள்ளானவர்களுக்கு முதலுதவி செய்வதை தவிர்த்து உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.சிவன்சுதன் தெரிவித்தார்.
நச்சுத்தன்மையுள்ள வீட்டுப் பாவனைப் பொருட்களால் அநாவசியமாக ஏற்படுத்தும் விபத்துக்களை தடுப்போம் என்ற தொனிப்பொருளில், தேசிய விஷ ஒழிப்புத்தினம் இம்மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் வியாழக்கிழமை (17) வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நஞ்சூட்டல் என்பது எங்களுக்கு நாங்களே செய்து கொள்வது, நமக்குத் தெரியாமல் செய்துகொள்வது, விவசாய நடவடிக்கைகள் மூலம் ஏற்படுகின்றமை ஆகிய விடயங்களால் நஞ்சூட்டல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
நஞ்சூட்டலுக்குட்பட்ட ஒருவரை, உப்பு நீர், தேங்காய்ப்பால் கொடுத்து வாந்தி எடுக்கச் செய்தால், அந்நபருக்கு நுழையீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். அத்துடன், சிகிச்சை செய்வதிலும் சிரமமாகவும் இருக்கின்றது.
எமக்குத் தெரியாமல் நஞ்சூட்டப்படுகின்ற செயற்பாடுகளும் அதிகமாக இடம்பெறுகின்றன. உதாரணத்துக்கு நுளம்புக்காக சுருள் கொளுத்தும் போது, அதன் புகையானது 100 சிகரெட்டுக்கு இணையான நஞ்சாகவுள்ளது.
கடந்த 6 மாதங்களில் மருந்துகளை தவறாக பாவித்து நஞ்சூட்டப்பட்ட செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அளவுக்கதிகமான மருந்துப்பாவனை, தேவையற்ற பாவனை, முறையற்ற பாவனை என மருந்துகளால் நஞ்சூட்டப்படுகின்றனர்.
அடுத்த நிலையாக விவசாய நடவடிக்கைகளால் நஞ்சூட்டப்படுகின்ற செயற்பாடுகள், கிருமிநாசினிகளின் பயன்பாடு போன்ற காணப்படுகின்றன என்றார்.
யாழ். போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் கே.நந்தகுமார், உளவளத்துறை வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி எஸ்.சிவயோகன், பொது வைத்தியநிபுணர் வைத்தியகலாநிதி என்.சுகந்தன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.