அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் முதலீடுகளை மேற்கொள்ள இணைந்து செயற்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சி.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றய தினம் காலை 11.45 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அச்சுவேலி கைத்தொழிற் பேட்டை 220 மில்லியன் ரூபாவில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மீள்நிர்மாணம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இங்குள்ள அச்சம் என்னவென்றால், யாழ். மாவட்டத்தில் இருக்கின்ற தொழில் முனைவோரை ஒன்றினைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வர்த்தகர்களிடையே நடைபெறுகின்றதை போல மாகாணத்தினை சாராதவர்கள் தொழில் வாய்ப்புக்களை ஆக்கிரமிக்க கூடிய அச்சம் இருக்கின்றது.
அந்த நிலையை மாற்ற வேண்டுமாயின் தனியாக தொழில் முதலீடு செய்யக்கூடியவர்களோ அல்லது கூட்டாக கூட்டிணைந்த கம்பனிகளாக தொழில் புரியக்கூடியவர்களோ, பங்குதாரர்களாக இணைந்து செயற்பட வேண்டும். அதற்காக ஏதாவது வகையில் எங்களது சமூக அல்லது நிர்வாக ஆதரவு உதவிகள், ஆலோசனைகள் தேவையென்றால் வழங்க முடியும்.
இதை வலியுறுத்தி எங்களின் சமூகம் விழிப்படைய வேண்டும். வசதியுள்ளவர்கள் விழிப்படைந்து முதலீடாக இதைச் செய்து தொழில் வளத்தினை உருவாக்க முன்வர வேண்டும். முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் அச்சங்கள் அடிப்படையில் இந்த கோரிக்கையினை முன்வைக்கின்றேன்” என்றார்.